வரலாற்றுச் சாதனை படைத்த சாந்தி பெரேரா

வரலாற்றுச் சாதனை படைத்த சாந்தி பெரேரா

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Sep 2026 - 7:23 am

2 mins read

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சிங்கப்பூரின் சாந்தி பெரேரா சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் பலோமா மிசுஹோ விளையாட்டரங்கில் செப்டம்பர் 27ஆம் தேதி அப்போட்டி நடந்தது. அதில், 22.78 நொடிகளில் இலக்கை எட்டி சாந்தி முதலிடம் பிடித்தார்.

போட்டியை வேகமாகத் தொடங்கிய சீனாவின் சென் யுஜீ 22.93 நொடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இந்தியாவின் ஹரிதா பத்ரா 23.20 நொடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே தொடர்ந்து இரண்டு முறை 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை சாந்தி பெரேரா படைத்தார்.

1951ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதில் இருந்து, இதுவரை ஆடவர்களில் ஐந்து பேர் தொடர்ந்து இரண்டு முறை 200 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் சாந்தி வெள்ளி பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் நான்கு பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், சாந்தி 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் 200 மீட்டரில் தங்கமும் வென்றிருந்தார்.

இதற்கிடையே, சாந்தியின் வரலாற்றுச் சாதனை குறித்து அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அற்புதம்! சாந்தி மீண்டும் தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இருமுறை வெற்றி பெற்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்,” எனச் சாந்தி பெரேராவுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்