சிறுவர்களின் கிறிஸ்துமஸ் குதூகலம்

2 mins read
fef56d55-b8ab-4224-8be6-8c624e7a6486
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - லைஃப் சென்டர்’ சமூக சேவைகள்
multi-img1 of 3

கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களுக்காக அண்மையில் கேன்பரா வீவக வாடகைக் குடியிருப்புகளில் வசிக்கும் 110 சிறுவர்களை ‘ஃபுராமா’ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது ‘லைஃப் சென்டர்’ சமூக சேவை நிலையம்.

‘ஃபுராமா’வின் ‘வாக்கா வாக்கா’ எனும் உள்ளரங்க விளையாட்டுத் திடலில் விளையாடி மகிழ்ந்தனர் சிறுவர்கள்.

பள்ளி விடுமுறைக்காக 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ‘வாக்கா வாக்கா’வில் விளையாட ஒருமுறை நுழைவுக்கு ஒரு சிறுவர், ஒரு பெற்றோருக்குக் கட்டணம் $29.

இந்நிகழ்ச்சியின்போது ‘வாக்கா வாக்கா’வில் 110 சிறுவர்கள் விளையாட இலவச அனுமதியை வழங்கியது ‘ஃபுராமா ஹோட்டல்’.

சிறுவர்களுக்குத் துணையாக 90 பெற்றோரும் வந்திருந்தனர்.

அனைவருக்கும் ‘ஃபுராமா’ ஹோட்டலிலேயே அறுசுவை இரவு உணவும் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு பள்ளியைச் சிறப்பாகத் தொடங்க அனைத்து சிறுவர்களுக்கும் ‘பாப்புலர்’ புத்தகக் கடையின் புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

கை நிறைய விளையாட்டுப் பொருள்கள், பரிசுகள் நிறைய பைகளோடு மனம் நிறைய கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி பொங்க, இல்லம் திரும்பினர் சிறுவர்கள்.

இதற்கு முன்பு நவம்பரில் பள்ளி விடுமுறைக்காக சிறுவர்களை கேன்பராவில் ஒரு கேளிக்கைத் திருவிழாவிற்கும் அழைத்துச் சென்றிருந்தது ‘லைஃப் சென்டர்’ சமூக சேவை நிலையம்.

இச்சிறுவர்கள், ‘லைஃப் சென்டர்’ சமூக சேவைகளின் கல்வி, பண்புநலத் திட்டங்களிலும் பங்குபெறுவார்கள்.

கேன்பரா வாடகை வீடுகளில் வசிக்கும் 4 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரியிலிருந்து ஒலியியல் (Phonics) பாடங்களையும், மார்ச்சிலிருந்து வாசித்தல், பேச்சு, நாடகம் பயிலரங்குகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது ‘லைஃப் சென்டர்’.

இத்திட்டங்களை கேன்பரா சமூக சேவைகள் அமைப்பு (SSO) ஆதரவு அளிக்கும்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்