சிங்கப்பூரின் மதிப்பிற்குரிய பிரதமர் பதவியில் தங்களின் அசாதாரணமான 20 ஆண்டு பதவிக்காலத்தில், உங்கள் அர்ப்பணிப்பு, தொலைநோக்குப்பார்வை மற்றும் தலைமைத்துவத்திற்கு இளைய தலைமுறையினர் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களின் சிறப்பான ஆட்சி நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.
2004 முதல் 2024 வரையிலான உங்களின் இருபது ஆண்டுகாலப் பதவிக்காலம், நமது நாட்டின் வரலாற்றில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய காலமாகும்.
கொவிட்-19 தொற்றின்போது உங்கள் தலைமை உலகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.
பல நாடுகள் நெருக்கடியைச் சமாளிக்கப் போராடியபோது, சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு மற்றும் நிதி இருப்பு ஆகியவை கொவிட் தொற்றின் புயலைச் சமாளிக்க உதவியது.
உங்களின் தெளிவான தகவல் தொடர்பும் தீர்க்கமான செயல்களும் குடிமக்களிடையே நம்பிக்கையையும் ஒற்றுமையையும் தூண்டி, சவால்களைச் சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட எங்களை ஊக்குவித்தது.
பொதுச் சேவையில் உங்களின் ஆளுமை, ஞானம், அர்ப்பணிப்பு, மற்றும் உங்களின் நேர்மை ஆகியவை சிங்கப்பூரர்கள் மற்றும் அனைத்துலக தலைவர்களின் மதிப்பையும் பாராட்டையும் உங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது.
எப்பொழுதும் நம் மக்களின் நலன்களுக்கு முதலிடம் கொடுத்துச் சவாலான காலங்களில், நீங்கள் நம் நாட்டை வழி நடத்தியுள்ளீர்கள்.
உங்கள் மரபு, வரும் தலைமுறைகளுக்கு நமது தேசத்தின் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் மற்றும் வடிவமைக்கும்.
உங்கள் பயணத்தில் அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் சேவையைத் தொடரும்போது நீங்கள் தொடர்ந்து வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நிறைவுடன் இருக்க வேண்டுகிறேன்.
மீண்டும் ஒருமுறை, சிங்கப்பூருக்கான உங்கள் தன்னலமற்ற சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றி. நீங்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பீர்கள். உங்கள்மீது எங்கள் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
உங்களின் சிறப்பான சேவை நமது நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும்.
கணேசன் ஜஷ்வந்த் தொடக்கநிலை ஆறு, கார்ப்பரேஷன் தொடக்கப் பள்ளி

