குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களில், சிறுவர்களுக்கும் சிறுமியர்க்கும் வெவ்வேறு ஆதரவு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்படி பெற்றோர்க்கு ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தேசிய கல்விக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் சம வயதுடைய சிறுமியருடன் ஒப்பிடுகையில், உயர்நிலைப் பள்ளி 1ஆம் வகுப்பில் பயிலும் சிறுவர்கள், தங்கள் பெற்றோரிடமிருந்து மேம்பட்ட ஆதரவு கிடைப்பதாகக் கருதுவது தெரியவந்தது. அதையடுத்து ஆய்வாளர்கள் அவ்வாறு பரிந்துரைத்தனர்.
பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஆதரவின் தரம் குறித்து சிறுமிகளுக்கு இருக்கும் கண்ணோட்டம் மாறுபட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் மெல்வின் சான் கூறினார்.
முந்தைய ஆய்வுகளிலும் பெற்றோர் ஆதரவு குறித்து சிறுமியரைவிடச் சிறுவர்களே ஆக்ககரமான கண்ணோட்டத்தைப் பதிவு செய்திருந்தனர் என்பதை அவர் சுட்டினார்.
“பெற்றோர் தாங்கள் போதிய ஆதரவு வழங்குவதாக நினைத்தாலும்கூட, தங்கள் குழந்தையின் கண்ணோட்டத்தையும் தங்கள் ஆதரவால் குழந்தை பெற்ற அனுபவத்தையும் அவர்கள் கருத்தில் கொள்வது முக்கியம்,” என்றார் டாக்டர் சான்.
சிறுவர்களுக்கும் சிறுமியர்க்கும் பொருத்தமான, வெவ்வேறு ஆதரவு அணுகுமுறை குறித்து பெற்றோரும் கல்வியாளர்களும் விளங்கிக்கொள்ள இந்த ஆய்வு உதவும் என்றார் அவர்.
பெற்றோர் வழங்கும் ஆதரவு மாணவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்துச் சென்ற ஆண்டு (2023), 28 பள்ளிகளில் உயர்நிலை 1ல் பயிலும் 5,441 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
தேசிய கல்விக் கழகம் சென்ற ஆண்டு, குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் குறித்து மேற்கொண்ட ‘டிரீம்ஸ்: வழிநடத்துவோர், செயல்படுத்துவோர் மற்றும் சிங்கப்பூரில் இளமைப் பருவ மேம்பாட்டுக்கான வழிகள்’ எனும் மிகப் பெரிய ஆய்வுத் திட்டத்தின்கீழ் இந்த இரு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்த ஆய்வில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 7,000 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
டாக்டர் சான் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், சமூக மனவெழுச்சி, சுதந்திரம், கல்வித் தேர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள், பள்ளி தொடர்பான ஆதரவு என நான்கு அம்சங்களில் பெற்றோரின் ஆதரவு குறித்து ஆராயப்பட்டது.
இதில், பெற்றோரிடமிருந்து உயர்ந்த நிலையில் ஆதரவு கிடைப்பதாக 62 விழுக்காட்டு மாணவர்கள் கருத்துரைத்தனர். குறைந்த ஆதரவு கிடைப்பதாக 33 விழுக்காட்டு மாணவர்கள் கூறிய வேளையில், ஐந்து விழுக்காட்டினர் மிகக் குறைவான ஆதரவே கிடைப்பதாகக் குறிப்பிட்டனர்.
பெற்றோர் அதிக ஆதரவு தருவதாகக் கூறிய பிரிவில் மூவரில் இருவர் சிறுவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறின.
வீட்டில் பெற்றோரின் ஆதரவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு பள்ளி சார்ந்த விவகாரங்களிலும் பெற்றோர் ஆதரவு முக்கியமா என்ற கேள்விக்கும் இந்த ஆய்வு விடை காண முயன்றதாக டாக்டர் சான் கூறினார்.
சிங்கப்பூர் போன்ற உலகமயமான நகரில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை இருப்பதைச் சுட்டிய அவர், வேலை சார்ந்த கடப்பாடுகளால் அவர்கள் நேரக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
வீடு, பள்ளி சார்ந்த விவகாரங்கள் இரண்டிலும் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் ஆதரவு தேவைப்படுவதை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.