சுற்றுப்பயணத் துறையில் போட்டித்தன்மையுடன் விளங்க மற்ற நாடுகள் அவற்றின் முயற்சிகளை மேம்படுத்தும் வேளையில், சிங்கப்பூர் அதன் சிறப்புகளை மேம்படுத்தி, கூடுதல் கற்பனை வளத்துடன் திகழ்வது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் அதன் போட்டித்தன்மையைக் கட்டிக்காக்க இது அவசியம் என்றார் அவர்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலையத்தில் ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் சுற்றுப்பயணத்துறைக் கழகத்தின் வருடாந்தர ‘சிங்கப்பூர் சுற்றுப்பயண விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
சுற்றுப்பயணத் துறை மேம்பாட்டில் சிங்கப்பூர் நீண்ட தொலைவைக் கடந்திருந்தாலும் தற்காலச் சுற்றுப்பயணிகளுக்குப் பல்வேறு தெரிவுகள் இருக்கின்றன என்பதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சுட்டினார். எனவே சிங்கப்பூர் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றார் திரு வோங்.
பல்வேறு இடங்களில் கூடுதல் தெரிவுகள் இருப்பதைச் சுட்டிய அவர், சிறந்த கடற்கரைகள் என்று எடுத்துக்கொண்டால் இந்த வட்டாரத்திலேயே இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் எனப் பல தெரிவுகள் இருக்கின்றன என்று கூறினார்.
“வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த வட்டாரத்தில் சுற்றிப்பார்க்க புகழ்பெற்ற பல மரபுடைமைத் தலங்கள் இருக்கின்றன. ஆக சிங்கப்பூர் செய்யவேண்டியது என்ன? நாம் எவ்வாறு போட்டித்தன்மையுடன் விளங்கப் போகிறோம்?” என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.
சிங்கப்பூரின் வரலாறு, வர்த்தக நடுவம் என்ற நிலைப்பாடு, அதன் தொடர்புத்தன்மை போன்ற சிங்கப்பூரின் சிறப்புகளை மேம்படுத்துவது ஓர் உத்தி என்று அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரின் கதையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வெவ்வேறு பின்னணிகளைச் சார்ந்தோர் எவ்வாறு ஒன்றுபட்டுள்ளோம், வெறும் ஈரநிலப் பகுதியாக இருந்த இடத்தைப் பெருநகராக உருமாற்ற எவ்வாறு இணைந்து செயல்பட்டோம் என்பதை எடுத்துச்சொல்வதில் கவனம் செலுத்தவேண்டும்,” என்று பிரதமர் தமது உரையில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் சிங்கப்பூர் நகரக் கண்காட்சி சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக அமைக்கப்படவில்லை. ஆனாலும் அது புகழ்பெற்ற சுற்றுப்பயண அம்சமாக விளங்குகிறது என்பதைத் திரு வோங் சுட்டினார்.
வர்த்தகச் சந்திப்புகளுக்கும், கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் எனப்படும் ‘மைஸ்’ நிகழ்ச்சிகளுக்கும் உலகின் புகழ்பெற்ற இடங்களில் சிங்கப்பூரும் அடங்கும். இந்த அம்சத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
சிங்கப்பூரின் தொடர்புத்தன்மையால் இந்த வட்டாரத்திற்குக் குறுகியகால வருகை தர விரும்புவோர்க்கு சிங்கப்பூர் ஒரு தொடக்கமாக அமையக்கூடும் என்பதையும் அவர் சுட்டினார்.