ஜோகூரில் போதைப்பொருள் தொடர்பாக நடந்த திடீர் சோதனைகளில் இரு சிங்கப்பூர் ஆடவர்கள் மே 29ஆம் தேதி சிக்கினர்.
இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல், சிறுநீர் பரிசோதனைக்கு வரத் தவறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஜூன் 13ஆம் தேதி சுமத்தப்பட்டன.
மலேசிய அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட அமலாக்கச் சோதனையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிக்கியவர்களிடமிருந்து 11.6 மில்லியன் ரிங்கிட் (S$3.2 மி.) மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இரு ஆடவர்களும் பின்னர் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (சிஎன்பி) ஒப்படைக்கப்பட்டனர்.
இருவரில் 48 வயதுடைய சந்தேக ஆடவர், சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக தேடப்பட்டவர். 35 வயது ஆடவர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ளத் தவறியதற்காக தேடப்பட்டவர் என்று சிஎன்பி அறிக்கை வெளியிட்டது.
கைதான 14 பேரில் 49 வயது வெளிநாட்டவர் ஒருவர், கும்பலின் தலைவன் என்று கூறப்படுகிறது.
கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் எடை 198.5 கிலோ என்று மதிப்பிடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இது சுமார் 1.24 மில்லியன் போதைப்புழங்கிகளுக்குப் போதுமான அளவு என்று தெரிவிக்கப்பட்டது.
மலேசிய காவல்துறையினர் போதைப்பொருளுடன் ஆறு வாகனங்கள், 14 கைக்கடிகாரங்கள், நகைகள், ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மொத்த மதிப்பு 1.17 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்படுகிறது.
கும்பல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இரு சிங்கப்பூர் ஆடவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர்களுக்கு 30 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 15 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

