நியூசிலாந்தில் சென்ற ஆண்டு நிகழ்ந்த வேன் வாகன விபத்தில் மூன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களும் கொல்லப்பட்டனர்.
2023ஆம் அண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த அந்த விபத்து நள்ளிரவுக்கும் மறுநாள் காலை எட்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தது. அந்த நேரம், உடல் களைப்பால் ஆபத்து ஏற்படக்கூடிய காலம் என்று நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரண விசாரணை நீதிபதியின் கண்டுபிடிப்புகளைக் கொண்ட அறிக்கையில் அத்தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கை புதன்கிழமையன்று (ஜூன் 5) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கிடைத்தது.
மூவரைப் பலிவாங்கிய அந்த விபத்துக்குப் பின்னால் களைப்பு காரணமாக இருந்திருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. களைப்பாக இருக்கும்போது வாகனம் ஓட்டாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை அச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாக மரண விசாரணை நீதிபதி அலெக்சாண்டிரா கனிங்காமெ அறிக்கையில் எழுதியிருந்தார்.
“ஓட்டுநர்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக சாலைவழி நியூசிலாந்தைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிடுவோர் களைப்பாக இருக்கும்போது வாகனம் ஓட்டாதிருக்க ஓய்வெடுக்கவும் உறங்கவும் போதுமான நேரம் ஒதுக்கவேண்டும்,” என்று மரண விசாரணை நீதிபதி தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் சுற்றிப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ‘கேம்பர் வேன்’ விபத்தில் ஈடுபட்டது. அதில் திருவாட்டி ஷெர்வின் சோங் ஷி யுன், 21, திருவாட்டி யாங் சின்யுவே, 21, திரு வின்சென்ட் லிம் ஜியா ஜுன், 24, ஆகிய மூவரும் மாண்டனர்.
ஜெரல்டீன் நகருக்கு அருகே உள்ள டெ மோனா ரோட்டில் சம்பவம் நிகழ்ந்தது. கிரைஸ்ட்சர்ச் நகரிலிருந்து ஜெரல்டீனுக்கு வாகனத்தில் சுமார் இரண்டு மணிநேரத்தில் போகமுடியும்.
திருவாட்டி சோங், திருவாட்டி யாங் இருவரும் அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்துப் பல்கலைக்கழகங்களில் பயின்று வந்தது மரண விசாரணையில் தெரியவந்தது. இருவரும் மாணவர் பறிமாற்றத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு லிம், இரண்டு வாரச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏப்ரல் மாதம் எட்டாம் தேதியன்று நியூசிலாந்து சென்றார். கிரைஸ்ட்சர்ச்சில் திரு லிம்மைச் சந்தித்த திருவாட்டி சோங், வேனை வாடகைக்கு எடுத்தார்.
வாடகை ஒப்பந்தத்தில் திரு லிம்தான் முக்கிய ஓட்டுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்விருவரும் ஆக்லாந்து நகருக்கு வேனை ஓட்டிச் சென்று அங்கு திருவாட்டி யாங்கைச் சந்தித்தனர்.
பிறகு அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

