1.1 மில்லியன் சிங்கப்பூர்வாசிகள் வரை கூடுதல் சுகாதார நிதியுதவி பெற முடியும்: அமைச்சர் ஓங்

1.1 மில்லியன் சிங்கப்பூர்வாசிகள் வரை கூடுதல் சுகாதார நிதியுதவி பெற முடியும்: அமைச்சர் ஓங்

3 mins read
83067a14-e0ea-4745-a6ab-a850b36fe8ae
திங்கட்கிழமை பிற்பகல் சுகாதார அமைச்சு வளாகத்தில் தொழில்நுட்பக் கல்விக் கழக வேலை-கல்வி தாதிமை பட்டயத் திட்டத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங். - படம்: சாவ் பாவ்

அக்டோபர் மாதத்திலிருந்து கூடுதல் நோயாளிகள் அரசாங்க சுகாதார நிதியுதவிகள் மூலம் பயன்பெற முடியும். அதிக வருமானக் குடும்பங்களிலிருந்து வருவோருக்கும் அச்சலுகைகள் நீட்டிக்கப்படும்.

சுகாதார அமைச்சு நோயாளிகளுக்குக் கட்டுப்படியாகும் வகையில் குடும்ப மாதாந்தரத் தனிநபர் சராசரி வருமான வரம்பு, அந்திமகால பராமரிப்பு நிதியுதவிக் கட்டமைப்பு, சமூக மருத்துவமனைகள் நிதியுதவிக் கட்டமைப்பு ஆகிய அம்சங்களில் மாற்றங்களைச் செய்யவுள்ளது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 30) பிற்பகல் சுகாதார அமைச்சு வளாகத்தில் தொழில்நுட்பக் கல்விக் கழக வேலை - கல்வி தாதிமைப் பட்டயத் திட்டத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அம்மாற்றங்கள் பற்றித் தெரிவித்தார்.

குடும்ப மாதாந்தரத் தனிநபர் சராசரி வருமான வரம்பு

சுகாதார அமைச்சு குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு கைகொடுக்கும் வகையில் ஏற்கெனவே பல நிதியுதவிகளை வழங்கிவரும் நிலையில், அவை மேலும் அதிகமான சிங்கப்பூரர்களைச் சென்றடையும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளன.

மெடிஷீல்டு லைஃப் சந்தாக் கட்டண நிதியுதவி, கேர்ஷீல்டு லைஃப் சந்தாக் கட்டண நிதியுதவி, சமூக சுகாதார உதவித் திட்டம், அந்திமகால பராமரிப்பு சேவைகளுக்கான நிதியுதவி, நீண்டகாலப் பராமரிப்பு சேவைகளுக்கான நிதியுதவி, வீட்டு அடிப்படையிலான பராமரிப்புக்கான மானியம், எல்டர்ஃபண்டு, இயலாமையுள்ள மூத்தோருக்கான இடைக்கால உதவித் திட்டம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.

ஒவ்வொரு நிதியுதவி பிரிவுக்கும் குடும்ப மாதாந்தரத் தனிநபர் சராசரி வருமான வரம்பு உயர்த்தப்படும். அவை $100 முதல் $800 வரை அதிகரிக்கும்.

தற்போதைய நோயாளிகளும் புதிய நோயாளிகளும் இந்த நிதியுதவிகளைப் பயன்படுத்த எதுவும் செய்ய வேண்டாம். அந்தந்த சேவை வழங்குநர்களும், திட்ட நிர்வாகிகளும் தகுதியுடையவர்களுக்கு மானியங்களை வழங்குவார்கள். கூடுதல் மானியங்கள் கொண்ட சமூக சுகாதார உதவித் திட்ட அட்டையை பயன்படுத்த தகுதியுடையவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்படும்.

சமூக மருத்துவமனைகள் நிதியுதவி கட்டமைப்பு

சமூக மருத்துவமனைகள் உள்நோயாளி நிதியுதவி சலுகை விகிதங்கள், தீவிர நோய்களுக்கான மருத்துவமனைகளோடு சீரமைக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டு நிதியுதவியைப் பெறமுடியும்.

அடுத்ததாக, சுகாதார அமைச்சு படிப்படியாக சமூக மருத்துவமனைகளில் நிதியுதவியுடன் கூடிய நோயறிதல் சேவைப் பட்டியலை விரிவுபடுத்தும். இது டிசம்பர் ஒன்றிலிருந்து தொடங்கும்.

“தீவிர நோய்களுக்கான மருத்துவமனைகளுக்கு நிகராக நாம் சமூக மருத்துவமனை சேவைகளுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும். நீண்ட நாள் தீவிர நோய்களுக்கான மருத்துவமனைகளில் இருக்கும்போது நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. சமூக மருத்துவமனைகளில்தான் அவர்களுக்குத் தேவைப்படும் சேவைகளும் அதிகம் உள்ளன. அனைவரும் சமமான வகையில் மருத்துவ சேவைகளை அணுக முடியும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன,” என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

இதற்கிடையே, பயிற்சி பெறும் தாதியர்களால் இனி புதிய தொழில்நுட்பக் கல்விக் கழக வேலை-கல்வி தாதிமைப் பட்டயத் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட தாதியராக முடியும்.

தாதிமைக் கல்வியை முதல் முறையாக அறிமுகப்படுத்திய இத்திட்டம், சுகாதாரத் துறைக்குத் தொடர்ந்து தேவைப்படும் தாதியர்களுக்குத் தக்க பயிற்சிகளை அளித்து அவர்களை அப்பணிக்கு தயார்ப்படுத்த முடியும்.

இத்திட்டத்தில் சேரும் பயிற்சிபெறும் தாதியர்கள் வகுப்பறைக் கற்றலுக்கு அப்பாற்பட்டு பணியிடப் பயிற்சியையும் பெறுவர். இந்த மூவாண்டுப் பட்டயக்கல்வி முடிவுறும்போது பயிற்சி பெறும் ஆசிரியர்கள் சிங்கப்பூர் தாதிமைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட தாதியராகத் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

“இத்திட்டம் யார் வேண்டுமானாலும் தாதிமைத் தொழிலைத் தேர்ந்தெடுத்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை அளிக்கிறது. சிங்கப்பூரில் தாதியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அமைச்சர் கூறினார்.

இத்திட்டத்தில் சேர இருக்கும் மாணவி பிரேமலதா நாராயணன், 31, “இந்தக் கல்வித் திட்டம் மூலம் என் திறன்களை மேம்படுத்திக்கொண்டு சமூகத்துக்கு உதவிக்கரம் நீட்ட முடியும். இதன் மூலம் என்னால் அதிக பொறுப்புகளையும் கையாண்டு தாதியர் பணியில் சிறப்பாகச் செயலாற்ற முடியும்,” என்றார்.

புதிய திட்டத்தில் சேர இருக்கும் பிரேமலதா.
புதிய திட்டத்தில் சேர இருக்கும் பிரேமலதா. - படம்: சாவ் பாவ்
குறிப்புச் சொற்கள்