சிங்கப்பூரின் வர்த்தகச் சமூகத்தை உலுக்கிய பில்லியன் வெள்ளி நிக்கல் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் கணக்காய்வாளர் 108 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
இந்த மோசடி தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது. 37 வயது இங் யு ஸி, செயல்படாத வர்த்தகங்களின் பெயர்களில் நிதி திரட்டியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.
நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக, சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்கள் முதலீட்டாளர்கள் ஆகியோரிடமிருந்து கிட்டத்தட்ட 1.48 பில்லியன் வெள்ளியை செயல்படாத வர்த்தகத்திற்கு முதலீடாக இங் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
என்வி குழுமம் (Envy group) எனும் மோசடி நிறுவனம் மூலம் நிக்கல் வர்த்தகத்தில் முதலீடு செய்து, காலாண்டுக்கு சராசரியாக 15 விழுக்காடு லாபம் பெறலாம் என முதலீட்டாளர்களுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறினார் இங்.
அதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் மில்லியன் கணக்கான பணத்தை சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக இங் செலவிட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்தப் பணத்தைப் பயன்படுத்தி மூன்று மாடி வில்லா வீட்டையும் பல மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பகானி கார் ஒன்றையும் இங் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகவும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய முதலீட்டு மோசடிகளில் இது ஒன்று எனக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இங்மீது முதன்முதலில் மார்ச் 20ஆம் ஆண்டு இரு மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவர்மீது புகார்கள் தொடர்ந்து வரத் தொடங்கின. இவ்வாண்டு பிப்ரவரி வரை அவர்மீது கிட்டத்தட்ட 108 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் 105 குற்றச்சாட்டுகள் நிக்கல் முதலீடு மோசடி தொடர்புடையவை.

