மிகப் பெரிய நிக்கல் (nickel) மோசடியில் சிக்கியிருக்கும் சந்தேக நபரான வர்த்தகர் இங் யு சீ, தான் புரிந்த குற்றங்களிலிருந்து வந்த வருமானத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இங், 1.46 பில்லியன் வெள்ளி மதிப்பிலான நிக்கல் மோசடிக்குக் காரணமாக விளங்கினார் என்று நம்பப்படுகிறது. ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கியது, நம்பிக்கை துரோகம் இழைத்தது உள்ளிட்டவற்றின் தொடர்பில் 37 வயது இங் மீது 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் 66 குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.
தனக்குக்கீழ் இருந்த நிறுவனங்களின் மூலம் நிக்கல் வாங்கி விற்று லாபம் ஈட்டலாம் என்று விளம்பரப்படுத்திய இங், முதலீட்டாளர்களை ஈர்த்தார். அவரின் என்வி அசெட் மேனேஜ்மண்ட் (Envy Asset Management), என்வி குளோபல் டிரேடிங் (Envy Global Trading) ஆகியவை அந்நிறுவனங்கள் ஆகும்.
இங், தான் வழங்கியதாகக் கூறப்படும் ‘வாய்ப்பை’ பிறரை நம்ப வைக்கப் போலி ஆவணங்களைத் தயார்செய்தார் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
உண்மையில் என்வி நிறுவனங்கள் நிக்கலை வாங்கவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை, மற்ற முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இங், நிறுவனத்தின் நிதியை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தவறான முறையில் ஈட்டப்பட்ட தொகையைக் கொண்டு அவர், அதிக விலைகொண்ட ஓவியங்கள், சொகுசுக் கார்கள், நகைகள் போன்றவற்றை வாங்கியதாகக் கருதப்படுகிறது.
மில்லியன் வெள்ளி மதிப்பிலான பகானி, ரோல்ஸ்-ராய்ஸ், லம்போர்கினி (Pagani, Rolls-Royce Lamborghini) போன்ற 20 சொகுசு கார்களை 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2021 பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வாங்கியிருக்கிறார். அதோடு, 2020 ஜூனிலிருந்து 2020 டிசம்பர் வரை அவர் நான்கு வீடுகளை வாங்க 20 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததுடன் மில்லியன் வெள்ளிக் கணக்கில் ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், ஓவியங்கள், நகைகள் ஆகியவற்றையும் வாங்கியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

