2027, ஜனவரி 1 முதல் சிங்கப்பூர் புதிய இஆர்பி முறைக்கு முழுமையாக மாறும்

2027, ஜனவரி 1 முதல் சிங்கப்பூர் புதிய இஆர்பி முறைக்கு முழுமையாக மாறும்

2 mins read
2944d892-973a-45da-a4c3-984d170da23a
‘ஓபியு’ கருவியை இன்னும் பொருத்தாத வாகன உரிமையாளர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து இறுதி நினைவூட்டல் அனுப்பப்படும். மேலும் கருவியை இலவசமாகப் பொறுத்த மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓபியு (on-board unit) கருவி பொருத்தப்பட வேண்டும். அப்போது நாடு அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்கு (இஆர்பி) முறைக்கு முழுமையாக மாறும்.

நிலப் போக்குவரத்து மற்றும் தொடர்புடைய விவகாரங்கள் மசோதாவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) அன்று விவாதத்திற்கு கொண்டு வந்தபோது, ​​இஆர்பி 2 முறை, இஆர்பி நுழைவாயில்களுக்குப் பதிலாக செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, வாகனங்களில் ஓபியு கருவி இருப்பது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார்.

இங்குள்ள மொத்த வாகனங்களில் 93 விழுக்காடு அதாவது சுமார் 930,000 வாகனங்கள் இதுவரை ஓபியு கருவியைப் பொருத்தியுள்ளன.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் ஓபியு கருவியைப் பொருத்தும் பணி முடியும் கட்டத்தில் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓபியு கருவியைப் பொருத்தாத வாகன உரிமையாளர்களுக்கு 2026, பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து இறுதி நினைவூட்டல் அனுப்பப்படும். மேலும் இலவசமாக அவ்வாறு செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு, மோட்டார் சைக்கிள்களில் கருவியைப் பொருத்துவதற்கு $35யும் மற்ற அனைத்து வாகனங்களிலும் பொருத்துவதற்கு $70யும் வசூலிக்கப்படும்.

புதிய இஆர்பி முறை, சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் இஆர்பி 1 முறையை விட மிகவும் துல்லியமாக இருக்கும் என்று திரு சியாவ் கூறினார். இஆர்பி 1 முறை பின்னர் நீக்கப்படும். தற்போது தீவு முழுவதும் 95 இஆர்பி நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் 22 செயல்பாட்டில் உள்ளன.

இஆர்பி 2 முறை, பெரிய மற்றும் விலையுயர்ந்த நேரடி நுழைவாயில்களை நிறுவாமல் புதிய வரி வசூலிப்புப் புள்ளிகளை அறிமுகப்படுத்த அதிகாரிகளை அனுமதிக்கிறது. “ஒரே இடத்தில் அல்லாமல், பல்வேறு இடங்களில் சிறிய அளவில் இஆர்பி கட்டணங்களை வசூலிக்கலாம். இது மிகவும் நியாயமானதாக இருக்கும்,” என்று மேலும் அமைச்சர் கூறினார்.

இஆர்பி 2 அனுபவம் ஏற்கெனவே உள்ள முறையைப் போலவே இருக்கும் வகையில் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று திரு சியாவ் கூறினார். அரசாங்கம் உடனடியாகத் தூர அடிப்படையிலான கட்டணத்தை அறிமுகப்படுத்தாது என்பதே இதன் பொருள் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்