பரோட்டா கடையில் தீ; ஒருவர் காயம்

1 mins read
0bb921bd-2c8d-4429-a913-9dbe070a658e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள ஓர் இந்திய முஸ்லிம் உணவுக்கடையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 6) காலை தீ மூண்டது.

அச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காலை 8:45 மணிவாக்கில் புளோக் 632, புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் உள்ள முஃபிஸ் புட் கார்னரில் தீப்பிடித்தது என்று தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கூறினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அக்கடையில் இருந்து மூன்று பேரை வெளியேற்றினர். முகத்தில் காயமடைந்த ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கடையின் சமையல் அறையில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் அணைத்தனர்.

அடுப்பில் இருந்து தீ ஏற்பட்டதாகவும் அதை அணைக்க முயற்சி செய்தபோது தம் ஊழியர் காயமுற்றதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

தீச்சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரிசெய்ய ஐந்து நாள்களுக்குக் கடை மூடப்பட்டிருக்கும் என்றும் தமது கடையில் நாள் ஒன்றுக்கு 3,000 வெள்ளிவரை வர்த்தகம் நடைபெறும் என்றும் உரிமையாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்