ஊடுருவப்பட்ட சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவர், மோசடிச் செயல்களில் ஈடுபட்ட கும்பல்களுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அத்தகைய சிங்பாஸ் கணக்குகளில் ஒன்று, புதிய வங்கிக் கணக்கைத் திறக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த வங்கிக் கணக்கு, தவறாக ஈட்டப்பட்ட ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகைக்குத் தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது.
சந்தேக நபரான 26 வயது ஜானத்தன் நியோ சூன் ஹியேன் மீது திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தவறாக பெறப்பட்ட பணத்தைப் பிறரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிறருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளை அனுமதியின்றி உபயோகிக்க வகைசெய்தது, மோசடிச் செயல்களுக்காக சிங்பாஸ் கணக்கு விவரங்களைப் பெறுவது போன்ற செயல்களை மேற்கொண்டதாக நியோ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் புரிந்ததாகச் சொல்லப்படும் குற்றங்கள் 2024ஆம் ஆண்டு நடுப்பகுதிக்கும் இவ்வாண்டு தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூரரான நியோ, டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்ட போலி வேலை விளம்பரங்களின் மூலம் ஊடுருவப்பட்ட சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கு மோசடிகளை மேற்கொள்ளும் கும்பல்களுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை, ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 9) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.