முன்னாள் கணவரிடமிருந்து பெண்ணுக்கு மாதம் $1

1 mins read
01af6a98-d144-4ef3-bf21-0801af9bf51f
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது முன்னாள் கணவர் மாதந்தோறும் தனக்கு 2,500 வெள்ளி நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்று ஒரு பெண்ணின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நிராகரித்துவிட்டார்.

அதேவேளை, மணமுடித்த தம்பதியாக இருந்தபோது இருவருக்கும் சொந்தமான சொத்துகளில் முன்னாள் கணவருக்கு இருந்த பங்கை அந்த நீதிபதி 10 விழுக்காடு குறைத்துள்ளார். திருமணத்துக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணின் நலனுக்கும் அந்நபர் தொடர்ந்து பங்கம் விளைவிக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து நீதிபதி அவ்வாறு உத்தரவிட்டார்.

அலுவலகப் பணி உதவியாளராகப் (Administrative Assistant) பணிபுரியும் அப்பெண்ணின் மாதச் சம்பளம் 2,340 வெள்ளி. முன்னாள் கணவரிடமிருந்து அடிப்படை உதவித் தொகையாக அவர் மாதந்தோறும் ஒரு வெள்ளி பெறுவார். மாவட்ட நீதிபதி ஒருவர் முன்னதாக அவ்வாறு தீர்ப்பளித்திருந்தார்.

அந்த ஒரு வெள்ளித் தொகை, வருங்காலத்தில் முன்னாள் கணவரிடமிருந்து நிதி ஆதரவு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் அப்பெண்ணின் உரிமையைக் குறிப்பதாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

அந்தப் பெண், கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். சிங்கப்பூர் ஆயுதப் படையில் முழுநேர தேசிய சேவையாளராக இருந்த அவரின் முன்னாள் கணவரின் மாதச் சம்பளம் 5,212 வெள்ளியாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்