மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1 டன் காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் உணவு அமைப்பும் இணைந்து நவம்பர் 6ஆம் தேதிக்கும் நவம்பர் 7ஆம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் கூட்டு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக வரும் காய்கறி சரக்கு வாகனங்களைக் குறிவைத்து சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களில் உள்ள பொருள்களுக்கு தகுந்த அனுமதி பெறப்படவில்லை என்பதை அதிகாரிகள் அறிந்தனர்.
அதன் பின்னர் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 1 டன் உணவுப்பொருள்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை தொடர்வதாக ஆணையமும் அமைப்பும் நவம்பர் 9ஆம் தேதி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூரில் உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே காய்கறிகள், பழங்களை இறக்குமதி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யும் போது தகுந்த அனுமதியை அவர்கள் பெற வேண்டும்.
காய்கறி, பழங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.