$10 நிர்வாகக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்

இஆர்பி கட்டணம் செலுத்தத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு ஐந்து நாள் சலுகை

$10 நிர்வாகக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்

3 mins read
d6980c50-28bf-4af0-b551-f6d075869891
2024 அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து, இஆர்பி கட்டணம் செலுத்தத் தவறிய வாகன ஓட்டிகளுக்கு அதுபற்றி குறுஞ்செய்தி வழியாகத் தெரிவிக்கப்படும். - படம்: சாவ்பாவ்

செலுத்தத் தவறிய சுங்கக் கட்டணங்களை ஐந்து நாள்களுக்குள் செலுத்தும் மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு, மின்னியல் சாலைக் கட்டணத்திற்கான (இஆர்பி) $10 நிர்வாகக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த நடைமுறை இவ்வாண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும் என்று வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்துள்ளார்.

வரும் 2025ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து அடுத்த தலைமுறை இஆர்பி 2.0 கட்டண முறை நடப்பிற்கு வரவுள்ள நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஆர்பி 2.0 கட்டண முறையானது, சுங்கக் கட்டணம் செலுத்தத் தவறிய வாகன ஓட்டிகளுக்கு அதுகுறித்து நினைவூட்டும் என்றும் அக்கட்டணத்தைச் செலுத்த வகைசெய்யும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் மூலமாகச் செயல்படும் இஆர்பி 2.0 முறையின்படி, வாகனத்தினுள்ளேயே மின்னியல் சாலைக் கட்டணக் கருவி (On-Board Unit) பொருத்தப்படும். அதிலுள்ள தொடுதிரை மூலமாகவே வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தலாம் என்று அமைச்சர் சீ செய்தியாளர்களிடம் கூறினார்.

“இஆர்பி 2.0 கருவி பொருத்தப்பட்டபின், சுங்கக் கட்டணம் தொடர்பில் வாகன ஓட்டிகளுக்குக் கடிதம் அனுப்ப தேவையிருக்காது. அதனால், அவர்களிடமிருந்து $10 நிர்வாகக் கட்டணம் வசூலிக்க வேண்டிய தேவையும் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு இராது,” என்று திரு சீ குறிப்பிட்டார்.

வாகனங்களில் மின்னியல் சாலைக் கட்டணக் கருவிகளைப் பொருத்தும் பணி 2026ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும். இதுநாள்வரை, ஏறத்தாழ 100,000 வாகனங்களில் அவை பொருத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் சொன்னார்.

சிங்கப்பூரின் மொத்த வாகன எண்ணிக்கையில் ஏறக்குறைய 10% வாகனங்களில் மட்டுமே இஆர்பி 2.0 கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அதனால், வாகனங்களில் புதிய கருவி பொருத்தப்பட்டிருப்பினும் இல்லையெனினும் நிர்வாகக் கட்டணத் தள்ளுபடியானது வாகன ஓட்டிகளுக்கு இடைக்காலத் தீர்வாகவே இருக்கும் என்று திரு சீ குறிப்பிட்டார்.

இப்போதைக்கு, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி பழுதாகிவிட்டதாலோ, காலாவதியான அல்லது முறையாகச் செருகப்படாத அட்டையாலோ, அல்லது அவ்வட்டையில் போதிய பணமில்லாததாலோ வாகன ஓட்டி ஒருவர் அதனால் இஆர்பி கட்டணம் செலுத்த முடியாமல் போனால், அதுகுறித்து குறிப்பிட்ட நாள்களுக்குள் அவருக்குக் கடிதம் அனுப்பப்படும்.

அதன்பின், செலுத்தத் தவறிய இஆர்பி கட்டணத்துடன், $10 நிர்வாகக் கட்டணத்தையும் அவர் சேர்த்துச் செலுத்த வேண்டும். இணையம் வழியாகச் செலுத்தினால் நிர்வாகக் கட்டணமாக $8 வசூலிக்கப்படும். அவ்விரு கட்டணங்களையும் செலுத்தத் தவறினால் $70 அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

இஆர்பி கட்டணத்தைச் செலுத்தத் தவறியது தொடர்பில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 500,000 கடிதங்கள் அனுப்பப்படுவதாக அமைச்சர் சீ கூறினார்.

இந்நிலையில், 2024 அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து, இஆர்பி கட்டணம் செலுத்தத் தவறிய வாகன ஓட்டிகளுக்கு அதுபற்றி குறுஞ்செய்தி வழியாகத் தெரிவிக்கப்படும். அதன்பின் ஐந்து நாள்களுக்குள் அவர்கள் அக்கட்டணத்தைச் செலுத்திவிட்டால் $10 நிர்வாகக் கட்டணம் செலுத்த வேண்டியிராது.

அந்த ஐந்து நாள் சலுகைக் காலத்திலும் வாகன ஓட்டிகள் அக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், நிலப் போக்குவரத்து ஆணையம் அவர்களுக்குக் கடிதம் அனுப்பும். அதன்பின் அவர்கள் $10 நிர்வாகக் கட்டணத்துடன் சேர்த்து அக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அப்படியும் தவறினால், அவர்களுக்கு $70 அபராதம் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்