துணிக்கடைகளில் 6,800 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள கிட்டத்தட்ட 90 ஆடைகளைத் திருடியதாகக் கூறி, திங்கட்கிழமையன்று பத்துப் பேரைக் காவல்துறை கைதுசெய்தது.
அவர்களில் எழுவர் ஆண்கள், மூவர் பெண்கள். அவர்கள் 20 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
ஆர்ச்சர்ட் ரோடு, ஹார்பர்ஃபிரண்ட் வாக் பகுதிகளில் உள்ள கடைகளில் அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியதாகக் காவல்துறை தெரிவித்தது.
அக்டோபர் 16ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் இடம்பெற்ற திருட்டு முயற்சி குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை, காவல்துறைப் படக்கருவிகளில் பதிவான படங்கள், கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகள் ஆகியவற்றின் மூலம் தங்ளின், கிளமென்டி வட்டாரக் காவல்துறையினர் சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் கண்டனர்.
அதன்பின் இரு வாரங்களுக்குப் பிறகு இடம்பெற்ற காவல்துறை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆடைகளில் பல ‘யுனிக்லோ’ சட்டைகளும் பெண்களின் உள்ளாடைகளும் அடங்கும் என நம்பப்படுகிறது.
அவர்களில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள்மீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது.
குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு ஏழாண்டுவரைச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.