மாற்று எரிசக்திக்காக ஜூரோங் தீவின் 10% பகுதி ஒதுக்கீடு

2 mins read
b7e2f6d4-cebf-41d6-86c7-9cab70c605f6
ஜூரோங் தீவு. - படம்: ஜேடிசி
multi-img1 of 2

பொதுவாக எரிபொருளை அதிகம் சார்ந்திருக்கும் ஜூரோங் தீவு இப்போது நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைப் பின்பற்றி வருகிறது.

ஜூரோங் தீவின் கிட்டத்தட்ட 300 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட நிலப்பகுதி பசுமை எரிபொருள் போன்ற மாற்று எரிசக்தி முறைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. ஜூரோங் தீவின் நிலப்பகுதியில் 10 விழுக்காடு அங்கம் வகிக்கும் இப்பகுதி, 400 காற்பந்துத் திடல்களைவிடப் பெரியது.

மேலும், சிங்கப்பூரின் ஆகப்பெரிய பசுமைத் தரவு மையப் பூங்காவும் தொழில்துறைத் தீவான ஜூரோங் தீவில் அமையும். அதற்கென கூடுதலாக 20 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட நிலப்பகுதி ஒதுக்கப்படுகிறது.

இப்பகுதி, பரப்பளவில் கிட்டத்தட்ட 25 காற்பந்துத் திடல்களுக்குச் சமம்.

ஜூரோங் தீவு, நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிசக்தி, ரசாயனத் தளமாக உருமாற்றம் காணும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்தீவில் உள்ள பல நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட பொருள்களை உற்பத்தி செய்வதிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் எரிசக்தியைப் பயன்படுத்துவதிலும் முன்னேற்றம் கண்டுள்ளன.

ஜேடிசி கார்ப்பரே‌ஷன் அமைப்பும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் திங்கட்கிழமை (அக்டோபர் 27) இதனை அறிவித்தன. சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தையொட்டி இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டான் சீ லெங், தனிச்சிறப்பு வாய்ந்த ரசாயனங்களைக் கையாளும் நிறுவனங்கள் பல, சிங்கப்பூரில் தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார். வட்டார அளவில் உயர்தரப் பொருள்களுக்கான தேவை அதிகரித்திருப்பது அதற்குக் காரணம்.

புதிய எரிசக்தி வகைகளையும் கரிமத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் முறைகளையும் சோதித்துப் பார்க்கும் தளமாக ஜூரோங் தீவு விளங்கும் என்று டாக்டர் டான் தெரிவித்தார். அந்த வகையில், எரிக்கப்படும்போது கரியமிலவாயுவை வெளியேற்றாத அமோனியா, ஹைட்ரஜன் போன்றவை பயன்படுத்தப்படும்.

‘கார்பன் கேப்சர்’ எனப்படும் எரிபொருள் பயன்பாட்டின்போது வெளியாகும் கரியமிலவாயுவை, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பிடித்துவைக்கும் முறையும் அtற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்