தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீங்குநிரல் மோசடி: பத்துப் பேர் கைது

2 mins read
ea56bbac-1705-4a44-a74d-c88a1add0550
கைதானோரில் 16 வயது இளையர் ஒருவரும் அடங்குவார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

வங்கி சார்ந்த அண்மைய தீங்குநிரல் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அறுவர் ஆண்கள், நால்வர் பெண்கள். அவர்கள் 16 முதல் 41 வயதிற்குட்பட்டவர்கள்.

19 முதல் 61 வயதிற்குட்பட்ட மேலும் 12 ஆண்களும் ஏழு பெண்களும் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.

தீங்குநிரலால் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவிகள் பாதிக்கப்பட்டது குறித்து இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே காவல்துறைக்கு அதிகப் புகார்கள் வந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் அல்லது சிங்பாஸ் விவரங்களை வேறு எவரிடமும் பகிர்ந்துகொள்ளாதபோதும் அனுமதியின்றி அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டனர். பொருளை அல்லது சேவையைப் பெற வேண்டுமெனில் செயலி ஒன்றை நிறுவுவதற்கான கோப்பைத் தரவிறக்கம் செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அந்தக் கோப்பைத் தரவிறக்கம் செய்ததும் அதிலிருந்த தீங்குநிரல் திறன்பேசியில் நிறுவப்பட்டுவிடும்.

அத்தீங்குநிரல் மூலம் திறன்பேசியில் சொடுக்கப்படும் ஒவ்வொரு விசையையும் மோசடிப் பேர்வழிகள் பதிவுசெய்து, திறன்பேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்களைக் களவாடிவிடுவர்.

பின்னர் வேறிடத்தில் இருந்தபடி, பாதிக்கப்பட்டவர்களின் திறன்பேசியிலுள்ள இணைய வங்கிச் செயலியில் மோசடிப் பேர்வழிகள் புகுந்து, தங்கள் சார்பில் இன்னொருவரைப் பணம் பெறுபவராகச் சேர்த்து, பணப் பரிமாற்ற வரம்பை உயர்த்தி, பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றிவிடுவர்.

தங்களது தில்லுமுல்லு வெளிப்பட்டுவிடாமல் இருக்க, வங்கிப் பணப் பரிமாற்றம் குறித்த குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் மோசடிப் பேர்வழிகள் அழித்துவிடுவர்.

இந்நிலையில், இம்மாதம் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை தீவு முழுவதும் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை, சந்தேகப் பேர்வழிகள் பத்துப் பேரைக் கைதுசெய்தது.

மோசடிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் www.scamalert.com.sg என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடித் தடுப்பு அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

அத்தகைய மோசடி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் 1800-255-0000 என்ற எண் வழியாக அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் வழியாகத் தகவல் தெரிவிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்