அரசியல்வாதிகள், முக்கிய நபர்களின் வங்கிக் கணக்குகளை ஊடுருவிய ஆடவருக்கு 10 வார சிறை

2 mins read
ஓசிபிசியில் உதவித் துணை தலைவரான ஒரே மாதத்தில் சட்டவிரோத செயல்
805c34f6-419e-405b-89ef-4be5a7761dad
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓசிபிசி வங்கியில் புதிய பணியை தொடங்கிய ஒரே மாதத்தில் அதன் உதவித் துணைத் தலைவர் சட்டவிரோத செயலில் ஈடுபடத் தொடங்கினார்.

வங்கி வாடிக்கையாளர்கள், சிங்கப்பூர் அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள், தமது சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்குகள், அவற்றின் மற்ற விவரங்கள் போன்றவற்றை அவர் ஊடுருவிப் பார்த்தார்.

இதன் தொடர்பில் ஆவ் ஜியா ஹாவ் என்ற 39 வயது ஆடவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ஆம் தேதி) தம்மீது சுமத்தப்பட்ட அனுமதியின்றி கணினித் தகவல்களை ஊடுருவிப் பார்த்த ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திரு ஆவ், 2022ஆம் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதிவரை வங்கியின் 369 வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பார்வையுற்றார்.

திரு ஆவ், ஓசிபிசி வங்கியின் உலக வர்த்தக வங்கிப் பிரிவின் (Global Commercial Banking division) உதவி துணைத் தலைவராக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி பொறுப்பேற்றார். அவருடைய பொறுப்புக்கேற்ப வங்கிக் கட்டமைப்பை அணுக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

புதிய பதவியில் விரைவிலேயே அவர் தனது பொறுப்புக்கு தொடர்பே இல்லாதவர்களின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி, தொலைபேசி அழைப்பு எண், வங்கிக் கணக்கு விவரங்கள், கல்வித் தகுதி, போன்றவற்றை ஊடுருவிப் பார்த்தார்.

அவர் தான் கண்ட விவரங்களை எந்த நபரிடமும் தெரிவிக்கவில்லை. வேலையில் அழுத்தம், விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவற்றாலேயே தான் அவ்வாறு செயல்பட்டதாகக் ஆவ் கூறினார்.

இதில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்ற வாடிக்கையாளர்கள் பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

ஓசிபிசி வங்கியின் இடர்ப்பாடு தவிர்ப்புப் பிரிவு தனது ஆய்வுக்குப் பிறகு வங்கிக்கு இது குறித்து தெரிவித்த பின்னரே ஆவ்வின் செயல் 2023 ஆகஸ்ட் 16ல் வெளிச்சத்திற்கு வந்தது.

அவருடைய மேல் அதிகாரி காவல் துறையில் புகாரளித்தார்.

அதே ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஆவ் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்