ரிவர் வேலி சாலையில் உள்ள ஒரு கடைவீட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயதுச் சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் உள்ளிட்ட மொத்தம் 16 சிறுவர்களும் 6 பெரியவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டுசேர்க்கப்பட்டனர்.
தீச்சம்பவத்தில் 10 வயதுச் சிறுமி இறந்ததை உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் உறுதிப்படுத்தினார்.
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு தேடுதல், மீட்புப் பணியை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பிய குடிமைத் தற்காப்புப் படைவீரர்களை வரவேற்க சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருந்த திரு சண்முகம், அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது இத்தகவலை உறுதிசெய்தார்.
அந்த பத்து வயது சிறுமி உட்பட ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட 16 சிறுவர்களும் 23 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பெரியவர்களும் தீச்சம்பவத்தில் காயமடைந்ததாகக் காவல்துறைக் கூறியது.
எண் 278 ரிவர் வேலி சாலையில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகக் காலை 9.45 மணிவாக்கில் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீச்சம்பவம் நடந்த மூன்று மாடிக் கட்டடத்தில் டொமேட்டோ சமையல் பள்ளி (Tomato Cooking School) உள்ளது. அங்கு சமையல் வகுப்புகளும் முகாம்களும் குழந்தைகளுக்காக இடம்பெறும்.
குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ, கட்டடத்தின் இரண்டாம், மூன்றாம் மாடிகளில் எரிந்துகொண்டிருந்தது.
“கட்டடத்தில் சிக்கிக்கொண்ட சிலரை வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கையால் மற்ற நபர்களும் மீட்கப்பட்டனர்,” என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சுற்றத்தினரையும் சேர்த்து கிட்டத்தட்ட 80 பேர் பாதுகாப்பாக இடமாற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
30 நிமிடத்திற்குள் கட்டடத்தில் தீ அணைக்கப்பட்டது. அதற்கு மூன்று நீர்ப்பாய்ச்சிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே வெளிநாட்டு ஊழியர்களும் பொதுமக்களும் சிலர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
“தீயைக் கண்டதும் நாங்கள் சாரக்கட்டை அப்படியே தூக்கிக்கொண்டு கட்டடத்திற்கு ஓடினோம். சிலர் கீழே பிடித்திருக்க, மேலும் சிலர் மேலே ஏறி சிறுவர்களை மீட்டோம்,” என்றார் சுப்பிரமணியன் சரண்ராஜ், 34.
“இந்த பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் போன்றவர்கள். அவர்களை எப்படி விட்டுச் செல்வது? கிட்டத்தட்ட பத்து பிள்ளைகளை மீட்டோம்,” என்றார் நாகராஜன் அன்பரசன், 35. அவர்களுடன் சிவசாமி விஜயராஜ், கண்ணதாசன், இந்தர்ஜித் சிங் முதலிய இன்னும் சில வெளிநாட்டு ஊழியர்களும் உதவினர்.
இந்நிலையில், தீச்சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு அவசர உதவி சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆந்திர துணை முதல்வரின் மகன் காயம்
இதற்கிடையே, இந்தியாவின் ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாணின் ஏழு வயது மகன் மார்க் சங்கரும் இத்தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டார் என பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. மார்க்கின் கைகால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் நுரையீரலுக்குள் புகை சென்றதாகவும் கட்சி கூறியது.
திரு கல்யாண், மண்யம் மாவட்டத்தில் தன் அதிகாரபூர்வ பயணத்தை முடித்தபின் சிங்கப்பூருக்கு விரைவதாக அப்பதிவு கூறியது.
தீச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.