3 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $100 - $250 வரை ரொக்கம்

உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தின் கீழ் இறுதி ரொக்க வழங்கீடு

3 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $100 - $250 வரை ரொக்கம்

கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

10 Nov 2026 - 12:21 pm

2 mins read

2027ஆம் ஆண்டு 21 வயது நிரம்பியிருக்கும் ஏறக்குறைய மூன்று மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் $100 முதல் $250 வரை ரொக்க உதவித்தொகை கிடைக்கவுள்ளது.

மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் (Assurance Package) கீழ் வழங்கப்படும் இறுதி ரொக்க வழங்கீடு இது.

2023ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுப்புத்திட்டம், சிங்கப்பூர்க் குடும்பங்கள் செலவைச் சமாளிக்கவும் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவும் உதவியாக இருக்கும் என்று நிதி அமைச்சு திங்கட்கிழமை (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

2022 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் தகுதிபெற்றவர்கள் $2,250 வரை பெற்றுள்ளனர்.

தகுதிநிலைக்கேற்ப ரொக்கம்

ஒருவரின் வருமான நிலையையும் அவரின் சொத்துகளையும் பொறுத்து ரொக்கத்தின் மதிப்பு அமைந்திருக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துகள் வைத்திருக்காத தகுதியுள்ள வயதுவந்த சிங்கப்பூரர்களில், வரிக்குட்பட்ட வருமானம் $39,000 அல்லது அதற்குக் குறைவாக உள்ளவர்களுக்கு $250யும் $39,001 முதல் $100,000 வரை உள்ளவர்களுக்கு $150யும் வழங்கப்படும்.

வரிக்குட்பட்ட வருமானம் $100,000க்கும் மேல் உள்ளவர்கள், வருமான வரம்பின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துகளை வைத்திருப்பவர்கள் $100 பெறுவர்.

மேல்விவரங்களுக்கு govbenefits.gov.sg  என்ற இணையத்தளத்தை நாடலாம். 1800-2222-888 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

தகுதிபெறுவோருக்குக் குறுந்தகவல் சேவை மூலம் கவ் டாட் எஸ்ஜி (gov.sg) அனுப்புநர் அடையாளத்துடன், ரொக்கம்பற்றித் தெரிவிக்கப்படும். ரொக்கத்தை ஒருவரின் வங்கிக் கணக்கில் போடுவதற்கு முன்னரும் பின்னரும் தகவல்கள் அனுப்பப்படும்.

சிங்பாசில் கைப்பேசி எண்ணைப் பதிவு செய்யாதவர்களுக்கு அவர்களின் தேசியப் பதிவு அடையாள அட்டையில் உள்ள முகவரிக்குக் கடிதம் அனுப்பப்படும்.

நவம்பர் 24ஆம் தேதிக்குள் தங்களின் அடையாள அட்டையை பேநவ் சேவையுடன் இணைக்கும் தகுதியுடையோர் டிசம்பர் 8ஆம் தேதி முன்கூட்டியே பணத்தைப் பெறுவர். பேநவ் வசதி இல்லாத, ஆனால் டிபிஎஸ்/பிஓஎஸ்பி, ஓசிபிசி, யுஓபி வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், நவம்பர் 30க்குள் வங்கிக் கணக்கு விவரங்களை இணையவாசலில் பதிவிட்டால், டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ‘ஜைரோ’ மூலம் உதவித்தொகையைப் பெறலாம்.

வரவுசெலவுத் திட்டம் 2023ல் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்திற்குக் கூடுதலாக $3 பில்லியன் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த உதவித்தொகை $9.6 பில்லியனாக உயர்ந்தது.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வழங்கப்படும் ரொக்க வழங்கீட்டுடன், யு-சேவ், சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள், சிடிசி பற்றுச்சீட்டுகள், மெடிசேவ் நிரப்புத்தொகை ஆகியவற்றுடன் வழங்கப்படும் உதவியின் மதிப்பு $10 மில்லியனுக்கும் அதிகம்.

குறிப்புச் சொற்கள்