2026ஆம் ஆண்டில் 21 வயது நிரம்பியிருக்கும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $100 முதல் $600 வரை ரொக்கம் கிடைக்கவிருக்கிறது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரொக்கம் வழங்கப்படும். நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
2023ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொகை வழங்கப்படும். ஒருவரின் வருமான நிலையையும் அவரின் சொத்துகளையும் பொறுத்து ரொக்கத்தின் மதிப்பு அமைந்திருக்கும்.
சிங்கப்பூர்க் குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்கவும் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவும் ரொக்கம் உதவியாக இருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
வரவுசெலவுத் திட்டம் 2023ல், உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்திற்குக் கூடுதலாக மூன்று பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, தொகுப்புத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 9.6 பில்லியன் வெள்ளிக்குக் கூடியது.
அது மேலும் மெருகூட்டப்பட்டது. இப்போது ரொக்க வழங்கீடு, மெடிசேவ் நிரப்புதொகை, சிடிசி பற்றுச்சீட்டுகள், யு-சேவ், சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் எனக் கொடுக்கப்படும் உதவியின் மதிப்பு 10 பில்லியன் வெள்ளிக்கும் அதிகம்.
தகுதிபெறுவோருக்குக் குறுந்தகவல் சேவை மூலம் கவ் டாட் எஸ்ஜி (gov.sg) அனுப்புநர் அடையாளத்துடன், ரொக்கம்பற்றித் தெரிவிக்கப்படும். ரொக்கத்தை ஒருவரின் வங்கிக் கணக்கில் போடுவதற்கு முன்னரும் பின்னரும் தகவல்கள் அனுப்பப்படும்.
மேல்விவரம் அறிந்துகொள்ள விரும்புவோர் இணையத்தளத்தை நாடலாம். இணைய முகவரி: govbenefits.gov.sg
தொலைபேசியிலும் தொடர்புகொண்டு விவரம் பெறலாம். தொலைபேசி எண்: 1800-2222-888.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், திருமதி சுதா அழகப்பன், 51, தம்மைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு ரொக்க வழங்கீடு பேரளவில் உதவுவதாகக் கூறினார்.
தமது கணவர், பேத்தியுடன் வசித்து வரும் அவர், “பற்றுச்சீட்டுகளைக் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கப் பயன்படுத்துவேன். அதன்மூலம் எனது கணவர் தரும் பணத்தைச் சேமித்துப் பிற தேவைகளுக்குப் பயன்படுத்துவேன்,” என்றார்.
கடந்த முறை பெற்ற வழங்கீட்டைத் தீபாவளியின்போது செலவிட்டு மகிழ்ந்ததை அவர் நினைவுகூர்ந்தார். மேலும், “நான் தொண்டூழியராக இருப்பதால் பல தரப்பட்டோரைச் சந்திப்பேன். எனக்கு மட்டுமன்றி என்னைப் போன்ற பலருக்கும் இது செலவுச் சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் திருமதி சுதா.

