சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 60 ஆண்டு நிறைவைச் சென்ற ஆண்டு கொண்டாடியது.
எஸ்ஜி60 என்றழைக்கப்பட்ட கொண்டாட்டங்கள் நடந்த 2025ஆம் ஆண்டில் தனிநபர்கள், நிறுவனங்கள் இரு தரப்பும் மொத்தம் 100 மில்லியன் வெள்ளியை சமுதாய, பொதுநல நடவடிக்கைகளுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். அதற்கு ஈடாக அரசாங்கம் இணை நிதி வழங்கும் திட்டத்தின்கீழ், இந்தத் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
‘எஸ்ஜி கிவ்ஸ் மேட்சிங் கிரான்ட்’ (SG Gives matching grant) எனப்படும் அந்த மானியம் குறித்து சென்ற ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்கீழ் எஸ்ஜி60 ஆண்டில் சமூக உண்டியல், அதிபர் சவால் போன்றவற்றின் வாயிலாக வழங்கப்படும் நன்கொடையின் அதே அளவு தொகையை அரசாங்கமும் வழங்கும்.
நன்கொடை வழங்கிய சிலர், அடுத்த ஈராண்டுகளில் 70 மில்லியன் வெள்ளிக்கும் அதிக தொகை அளிக்க உறுதியளித்திருப்பதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்தார்.
“இந்த நன்கொடையும் அர்ப்பணிப்புகளும் நமது சமூக சேவைத் துறையில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன,” என்றார் திரு கான்.
ஈடுகொடுக்கும் அரசாங்க மானியம், நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு வெள்ளியையும் வளர்க்கும் என அர்த்தமாகும் என்று குறிப்பிட்ட அவர், அது சமூக சேவை அமைப்புகளுக்குத் தொடர்ந்து நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும் என்றும் சுட்டினார். ‘எஸ்ஜி60 எஸ்ஜிஷேர்’ இயக்கத்தைக் கொண்டாடுவதற்காக பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரு கான் பேசினார்.
ஒட்டுமொத்தமாக அந்தத் தொகை, முன்னதாகவே திட்டமிட்டு செயல்படவும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் உதவி தேவைப்படும் சமூகங்களுக்குச் சேவையாற்றவும் மேலும் ஆக்ககரமான முறையில் நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடன் சமூக சேவை அமைப்புகளுக்கு உதவும் என்று திரு கான் விவரித்தார்.
தானம் வழங்குவதை ஊக்குவிக்க நன்கொடை அமைப்புகளுக்காகவும் சமூக சேவை நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்படும் நன்கொடைக்கு ஈடான தொகையை அரசாங்கமும் பந்தயப்பிடிப்புக் கழகமும் வழங்க சென்ற ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 600 மில்லியன் வெள்ளிக்கும் அதிக தொகை ஒதுக்கப்பட்டது.

