தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் கெப்பல் கிளப் நிலப்பகுதியில் 1,000 ‘பிடிஓ’ வீடுகள்

2 mins read
அக்டோபரில் விற்பனைக்கு விடப்படும்
ea583a05-6885-45b5-9917-9734e2c3569a
ஓவியரின் சித்திரிப்பில், 48 ஹெக்டர் பரப்பளவு கொண்ட முன்னாள் கெப்பல் கிளப் கோல்ஃப் திடலில் அமையவிருக்கும் ‘பிடிஓ’ வீடுகள். - படம்: டெஸ்மண்ட் லீ/ஃபேஸ்புக்

முன்னாள் கெப்பல் கிளப் கோல்ஃப் திடல் அமைந்திருந்த நிலப்பகுதியில் ஏறக்குறைய 1,000 ‘பிடிஓ’ வீடுகள் வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு விடப்படவிருக்கின்றன.

அங்கு ஈரறை ஃபிளெக்சி வீடுகள் முதல் நாலறை வீடுகள் வரையிலான பலவித வீடுகளும் அரசாங்க வாடகை வீடுகளும் கட்டப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வியாழக்கிழமை (மே 15) ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடுகள் 19 முதல் 46 மாடிகள் வரை கொண்ட புளோக்குகளில் அமைந்திருக்கும்.

அந்தப் பகுதியின் செழுமையான பல்லின உயிர்ச்சூழலுக்கு ஏற்ப, பசுமையான பகுதிகளும் அங்கு அமைக்கப்படும்.

இந்த நிலப்பரப்புக்கு அருகில் உள்ள ‘பெர்லேயர் கிரீக்’, சிங்கப்பூரின் தென்பகுதியில் எஞ்சியிருக்கும் இரண்டு சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும். 14ஆம் நூற்றாண்டில் அங்குக் காணப்பட்ட கருங்கல் பாறை ஒன்று கடல்துறை வணிகர்களுக்குச் சிங்கப்பூர்க் கடற்கரைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக விளங்கியதை அமைச்சர் லீ சுட்டினார்.

அந்தக் குடியிருப்புப் பேட்டையில் பாலர் பள்ளியும் இயற்கைக் கருப்பொருளில் அமைந்த விளையாட்டுத் திடலும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

48 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலப்பரப்பில் இந்த ‘பிடிஓ’ வீடுகளையும் சேர்த்து மொத்தம் 6,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் 3,000 தனியார் வீடுகளும் கட்டப்படும்.

இந்தப் புதிய குடியிருப்புப் பேட்டை, முதிர்ச்சியடைந்த புக்கிட் மேரா நகர்ப்புறத்தின் அங்கமாக விளங்கும்.

வட்ட ரயில் பாதையின் லேப்ரடார் பார்க், தெலுக் பிளாங்கா எம்ஆர்டி நிலையங்களுக்கு அந்தக் குடியிருப்பிலிருந்து நடந்து செல்ல இயலும்.

அந்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு, அதாவது 10 ஹெக்டர் பரப்பளவு பூங்காக்களுக்காவும் திறந்தவெளிக்காகவும் ஒதுக்கப்படும். இது ஏறக்குறைய 18 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான நிலப்பரப்பாகும்.

மேலும், ஜூலை மாதத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தோ பாயோ வெஸ்ட் பகுதியில் 740 வீடுகளை விற்பனைக்கு விடும் என்றும் அவை கேல்டிகாட் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் என்றும் அமைச்சர் லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்