சிங்கப்பூரில் கடந்த வாரயிறுதியில் விற்பனைக்கு விடப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளில் ஏறக்குறைய 1,150 வீடுகள் விற்பனையானதாகக் கூறப்பட்டுள்ளது.
‘லென்டோர் சென்ட்ரல் ரெசிடென்சஸ்’, எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டமான ‘ஆரெல் ஆஃப் தெம்பனிஸ்’ ஆகிய இரு திட்டங்களின்கீழ் விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் விற்பனை சூடுபிடித்த வேளையில், ‘ஆரியா’ திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகள் அந்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்று கூறப்பட்டது.
எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து, கடந்த வாரயிறுதியில் விற்பனையான வீடுகளையும் சேர்த்தால் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,200க்குமேல் பதிவாகியுள்ளது.
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ‘ஹட்டன்ஸ் ஏஷியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யிப் கூறினார்.
சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் சென்ற காலாண்டில் விற்பனை செய்த மொத்த வீடுகளின் எண்ணிக்கை 3,420 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இத்தகைய வீடுகளுக்கான தேவை வலுவாக இருந்ததற்கு, சொத்து அதிகரிப்பும் வட்டி விகிதக் குறைப்பும் காரணங்கள் என்றார் திரு யிப்.
இருப்பினும், இத்தகைய விற்பனை மத்திய முக்கியப் பகுதியில் (CCR) இந்த ஆண்டு அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இதர புதிய வீடுகளின் விற்பனையைப் பாதிக்கக்கூடும் என்று மொகல்.எஸ்ஜி நிறுவனத்தின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கொலஸ் மாக் எச்சரித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை மத்தியப் பகுதிக்கு வெளியே (OCR) உள்ள வட்டாரத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குத் தேவை அதிகரிப்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக சொத்துச் சந்தை நிலையாக இருக்கும்போது, 400க்கும் மேலான வீடுகளைக் கொண்ட பெரிய வீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகம் கண்ட ஓரிரு நாள்களில் 90 விழுக்காட்டு வீடுகளோ 100 விழுக்காடுமோ விற்று முடிவது வழக்கமன்று என்றார் அவர்.
மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, லென்டோர் ஹில்ஸ் ரோட்டில் உள்ள ‘லென்டோர் சென்ட்ரல் ரெசிடென்சஸ்’ வீட்டுத் திட்டத்தின் 477 வீடுகளில் 93.3 விழுக்காட்டு வீடுகள் விற்கப்பட்டுவிட்டன.
எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டமான ‘ஆரெல் ஆஃப் தெம்பனிசின்’ 760 வீடுகளில் 682 வீடுகள் முதல் நாளே விற்பனையாயின.
பீச் ரோட்டில் உள்ள ‘ஆரியா’ குடியிருப்பின் 188 வீடுகளில் 23 மட்டுமே விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது.