காஸாவுக்கு நிதி திரட்டும் முயற்சியில் களமிறங்கும் 1,000 தொண்டூழியர்கள்

2 mins read
bfdc430c-1adf-414c-83e0-7047ff03fa89
இவ்வாண்டு மார்ச் மாதம் ஸ்ரீ நாராயண மிஷன் வளாகத்தில் காஸா சிறார்களுக்கான அன்பளிப்புப் பைகளைப் பொட்டலம் கட்டும் தொண்டூழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐநா அனைத்துலக மனித ஒற்றுமை தினம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரிலிருந்து காஸாவிற்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குத் தலைமை தாங்கும் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பு டிசம்பர் 20ஆம் தேதி தீவு முழுவதும் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கவுள்ளது.

இந்த முயற்சியில் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட ஏறத்தாழ 1,000 தொண்டூழியர்கள் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி 2026 பிப்ரவரி 26ஆம் தேதி முடிவடையும் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் நிதி திரட்டும் முயற்சிகளில் அடங்கும்.

2023 முதல் கடந்த ஆகஸ்ட் வரை ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ மொத்தம் 84.4 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்களை காஸாவுக்கு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட காஸா பொதுமக்களின் பசி, நீரேற்றம், சுகாதாரம், சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிலவிவரும் மோதல் மிகவும் சிக்கலானது என்பதை அமைப்பு தொடர்ந்து தனது தொண்டூழியர்களுக்கு நினைவூட்டுகிறது என்றார் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ துணைத் தலைவர் நூர் முகமது மரைக்கான்.

“எதுவாயினும் நாம் தொடர்ந்து ஒற்றுமையாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

காஸா நிவாரணத்திற்காக 2024 மார்ச்சில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் உள்ள பல வர்த்தகங்களின் பங்களிப்புகளை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பார்வையிட்டார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் 5,000 சிறார்கள் பயன்பெறும் வகையில் அன்பளிப்புப் பைகளைப் பொட்டலம் கட்டும் நடவடிக்கையில் பிரதமர் லாரன்ஸ் வோங், உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம் இருவரும் ஈடுபட்டனர்.

‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் நிதி திரட்டும் பணிகளில் பங்களிக்கவும் ஈடுபட விரும்புவோரும் www.humanitymatters.org.sg என்ற இணையத்தளம்வழி மேல்விவரங்களை அறியலாம்.

குறிப்புச் சொற்கள்