சிங்கப்பூரில் நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்துக்குரிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
40க்கும் மேற்பட்ட கேளிக்கைக் கூடங்கள், இரவு விடுதிகள், உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
குற்றவியல் விசாரணைத் துறையின் ரகசியக் கும்பல்களுக்கு எதிரான பிரிவின் தலைமையில் சோதனைகள் நடத்தப்பட்டதாக அது கூறியது. காவல்துறையின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அதில் பங்குபெற்றனர்.
அந்த நடவடிக்கையின்போது கிட்டத்தட்ட 100 பேர் சோதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டோர் 19 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களிடம் விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.
சட்டவிரோதக் கும்பலுடன் தொடர்புடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
கேளிக்கை நிலையங்களிலும் இரவு விடுதிகளிலும் மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களிலும் வழக்கமான இடைவெளியில் அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்று காவல்துறை கூறியது.