சிங்கப்பூரில் 11 மாதப் பெண் குழந்தைக்கு ஆக அண்மையில் தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாகத் தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பு (CDA) தெரிவித்துள்ளது. அக்குழந்தை பாலர் பள்ளிக்குச் சென்றுவருவதாக அது கூறியது.
இந்த ஆண்டு (2026), சிங்கப்பூரில் ஒரு வயது நிரம்பாத குழந்தைகளிடம் தட்டம்மை கண்டறியப்பட்டிருப்பது இது ஐந்தாவது முறை என்றும் தட்டம்மைத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்ட பிறகு, பாலர் பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தைக்குத் தட்டம்மை தொற்றியிருப்பது இது முதன்முறை என்றும் அமைப்பு கூறியது.
உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மைத் தொற்று குறித்து பிப்ரவரி 17ஆம் தேதி தகவல் கிடைத்ததாக அது சொன்னது.
அந்தக் குழந்தை, ‘எம்எம்ஆர்’ எனப்படும் தட்டம்மை, ‘மம்ப்ஸ்’, ‘ருபெல்லா’ ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசி போடுவதற்கான வயதை இன்னும் எட்டவில்லை என்று அமைப்பு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.
அண்மையில் அக்குழந்தை சிங்கப்பூருக்கு வெளியே பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் தட்டம்மை தொற்றிய யாருடனும் தொடர்பில் இல்லை என்றும் தெரிகிறது. தற்போது குழந்தை குணமடைந்து வருவதாகக் கூறப்பட்டது.
தட்டம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அக்குழந்தை பாலர் பள்ளிக்குச் சென்றதால் அதனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்க்கு அந்த பாலர் பள்ளி இதுகுறித்துத் தகவல் அனுப்பியிருப்பதாகவும் ‘சிடிஏ’ அமைப்பு கூறியது.
நெருங்கிய தொடர்பில் இருந்த குழந்தைகளில் நால்வரைத் தவிர மற்றவர்களுக்கு ‘எம்எம்ஆர்’ தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் அவர்களுக்குத் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள் நால்வருக்கும் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 மாதக் குழந்தை பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகக் கூறிய பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, சம்பந்தப்பட்ட பாலர் பள்ளியில் மற்ற குழந்தைகளும் ஊழியர்களும் நலமாக இருப்பதை உறுதிசெய்வதன் தொடர்பில் ‘சிடிஏ’ அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறியது.

