கடைத் திருட்டு வழக்குகளில் 11 பேர் மீது குற்றச்சாட்டு

கடைத் திருட்டு வழக்குகளில் 11 பேர் மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2026 - 3:24 pm

2 mins read

பல்வேறு கடைத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 11 பேர் மீது நவம்பர் 16, 18 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது. இவர்களில் சிலர் இதற்கு முன்னரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் 26 முதல் 63 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களால் திருடப்பட்ட பொருள்களில் பழங்கள், மதுபானம், சருமப் பராமரிப்புப் பொருள்கள் ஆகியவை அடங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 15) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 26 வயது பெண்ணும் 29 வயது ஆடவரும் அடங்குவர். இவர்கள் ஜூலை 30ஆம் தேதிக்கும் அக்டோபர் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் செம்பவாங் கிரசெண்ட்டில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்பெண் 33 கடைத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அவற்றில் 21 சம்பவங்களை அவர் அந்த ஆடவருடன் இணைந்து செய்துள்ளார். திருடப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $960 வெள்ளி ஆகும்.

பேரங்காடித் திருட்டுத் தொடர்பில் 30 வயது பெண் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்படவுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி நார்த்பாயிண்ட் சிட்டியில் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் ஏறத்தாழ $112 மதிப்புள்ள 22 பொருள்களை அவர் திருடியதாக நம்பப்படுகிறது.

கடை ஊழியர் ஒருவரால் பிடிக்கப்பட்ட அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட காவல்துறை விசாரணையில், ஜங்ஷன் 9ல் உள்ள ஷெங் சியோங் கடையில் ஏழு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக அவருக்கு ஏற்கெனவே 24 மாத நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

செப்டம்பர் 29ஆம் தேதி பூகிஸ் ஜங்ஷனில் உள்ள பிஎச்ஜி பகுதிவாரிக் கடையில் 49 வயது ஆடவர் ஒருவர் $326 மதிப்புள்ள சருமப் பராமரிப்புப் பொருள் ஒன்றைத் திருடியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் மற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

மற்றொரு சம்பவத்தில், ஜூலை 29ஆம் தேதி மரினா பே லிங்க் கடைத்தொகுதியில் உள்ள ஜேசன்ஸ் டெலி கடையில் 40 வயது பெண் ஒருவர் கிட்டத்தட்ட $5 மதிப்புள்ள பழங்கள் அடங்கிய பெட்டி ஒன்றைத் திருடியதாக நம்பப்படுகிறது. அதே மாதத்தின் தொடக்கத்தில் அதே கடையில் நிகழ்ந்த மூன்று திருட்டுச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பெண் மீது திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்