ஈசூனில் கார் மோதி 11 வயதுச் சிறுமி காயம்

ஈசூனில் கார் மோதி 11 வயதுச் சிறுமி காயம்

படம்: இன்ஸ்டகிராம் காணொளி/sgfollowsall

08 Oct 2026 - 8:23 pm

1 mins read

ஈசூனில் உள்ள கார் நிறுத்துமிடம் ஒன்றில் புதன்கிழமை (அக்டோபர் 7) பிற்பகல் 1.15 மணியளவில் கார் மோதியதில் 11 வயதுச் சிறுமி காயமடைந்தார்.

புளோக் 813ஏ ஈசூன் ரிங் ரோட்டில் கார் மோதியதில் நடையர் காயமடைந்தது குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

பள்ளி முடிந்த பிறகு வாகன நெரிசல் மிகுந்த நேரத்தில் தொடக்கப் பள்ளி மாணவி சாலை விதியை மீறிக் கடக்க முயன்றதாகச் சமூக ஊடகப் பதிவு தெரிவிக்கிறது. காரில் அடிபட்ட பிறகு அச்சிறுமி நகர முயன்றார். ஆனால் கடுமையான வலி காரணமாக அவரால் நகர முடியவில்லை.

சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவ வாகனம் வரவழைக்கப்பட்டது. குடிமைத் தற்காப்புப் படை ஊழியர்கள் சாலையில் விழுந்துகிடந்த சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கும் காணொளி சமூக ஊடகத்தில் வெளியானது. அங்கு நின்றிருந்த ஒருவர் ஊதா நிறக் குடையைப் பிடித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

வெள்ளி நிறக் கார் ஒன்று அவர்களின் பின்புறமும் நீல நிறக் கார் இடப்புறமும் அவசர மருத்துவ வாகனம் வலப்புறமும் பாதையை மறித்தபடி நின்றன. இந்த இன்ஸ்டகிராம் காணொளி 36,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

காயமடைந்த சிறுமி கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காரை ஓட்டியதாக நம்பப்படும் 62 வயது ஆடவர் விசாரணைக்கு உதவிவருகிறார்.

குறிப்புச் சொற்கள்