வீட்டிலிருந்து ஓடிப்போன 14 வயது பெண் ஒருவர், தனது உறவினர் மூலம் சந்தித்த ஆடவரின் வீட்டில் அடைக்கலம் நாடினார்.
அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட ஆடவரும் அவரின் நண்பர்களும் பெண்ணை அளவுக்கதிகமாக மதுபானம் அருந்த வைத்து அவருக்கு ஒவ்வொருவராகப் பாலியல் வன்கொடுமை இழைத்தனர். அப்போது 18 வயதான உமர் அப்துல் ரஹிம், அப்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த மூவரில் ஒருவராவார்.
2021ஆம் ஆண்டு மே மாதம் அச்சம்பவம் நிகழ்ந்தபோது உமர் அப்துல் ரஹிம் தேசிய சேவையாற்றிக்கொண்டிருந்தார்.
இப்போது 21 வயதாகும் அவருக்கு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 1) 11 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்தது. பாலியல் வன்கொடுமை இழைத்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
மற்றொரு குற்றவாளியான 21 வயது முகம்மது உஸாய்ர் அப்துல் ரகுமான் எனும் அவரின் உறவினருக்குச் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 20 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது நூர் அஸ்ரி முகம்மது தாஹில், அவருக்குத் துணைபோனதாக நம்பப்படும் 21 வயது முகம்மது ஷாஹ்ரிட்ஸ்மி சாலே ஆகியோர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


