சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 100க்கு மேற்பட்டோரிடம் விசாரணை

1 mins read
e41e62f5-cf6b-410b-98cf-dcc685885ccc
படம்: காவல்துறை -

சூதாட்டம், உரிமமின்றிக் கடன் வழங்குதல், பாலியல் சேவை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

தங்ளின் காவல்துறை பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை இணைந்து கடந்த வாரம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 17 முதல் 70 வயதிற்குட்பட்ட 110 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தோ பாயோ, புக்கிட் தீமா, ரிவர் வேலி, சின் மிங் ரோடு ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு உடற்பிடிப்பு நிலையங்கள், வணிக நிலையங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அந்த கூட்டு அமலாக்க நடவடிக்கை இடம்பெற்றது.

அதில் மின்சிகரெட், சூதாட்டத் துணைச் சாதனங்கள், கிட்டத்தட்ட $7,000 மதிப்புள்ள ரொக்கம், கணினிகள், மின்னணுக் கருவிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்டோரில் 20 முதல் 47 வயதிற்குட்பட்ட 48 பெண்கள் பாலியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பொதுக் கேளிக்கை விடுதிகளில் அதிகாரபூர்வ வேலை அனுமதி அட்டை இல்லாமல் பணிபுரிந்த ஆறு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். 11 மின்சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கூட்டு அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 17 முதல் 69 வயதிற்குட்பட்ட 26 பேர் சட்டவிரோத கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்