தென்கொரிய இசைக்கச்சேரி நுழைவுச்சீட்டு மோசடியில் ஒரே வாரத்தில் $11,000 இழப்பு

தென்கொரிய இசைக்கச்சேரி நுழைவுச்சீட்டு மோசடியில் ஒரே வாரத்தில் $11,000 இழப்பு

2 mins read
d2d5c4d9-60d9-4f47-93a6-cb4a128966a5
பிரபல கே-பாப் இசைக்குழுவான பிடிஎஸ்சின் (BTS) இசைக் கச்சேரி டிசம்பர் 17, 19, 20, 22 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. - படம்: காவல்துறை

பிரபல கே-பாப் இசைக்குழுவான பிடிஎஸ்சின் (BTS) இசைக் கச்சேரிக்கான நுழைவுச்சீட்டு விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் மோசடிகள் மூலம் குறைந்தபட்சம் $11,000 இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டு விற்பனை ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. முன்னதாக ஜூன் 1ஆம் தேதியிலிருந்தே இசைக் கச்சேரி நுழைவுச்சீட்டு விற்பனை மோசடி தொடர்பாகக் குறைந்தபட்சம் 14 புகார்கள் பதிவாகி உள்ளதாக காவல்துறை சனிக்கிழமை (ஜூன் 6) கூறியது.

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான ஆர்எம், சுகா, ஜே-ஹோப், ஜிமின், வி, ஜுங்கூக் ஆகியோரை உள்ளடக்கிய தென்கொரிய இசைக்குழு, தனது அரிராங் உலகச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 17, 19, 20, 22 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் இசைக் கச்சேரி நடத்த உள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆகக் கடைசி நுழைவுச்சீட்டுகள், ‘குளூக்’ (Klook) என்னும் இணைய பயணத்தளம் மூலம் ஜூன் 6ஆம் தேதி விற்கப்பட்டன.

நுழைவுச்சீட்டு மோசடிகளில் ஈடுபட்டோர் எக்ஸ் உள்ளிட்ட பல சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக அதனை வாங்க விரும்புவோரை அணுகியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

எக்ஸ், இன்ஸ்டகிராம், கேரோசெல் போன்ற தளங்களில் இசைக் கச்சேரி நுழைவுச் சீட்டுக்கான கட்டணப் பட்டியல்கள் அல்லது விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் அதற்குப் பதிலளித்ததாகவும் அது கூறியது.

பேநவ் அல்லது பேநவ் கியூஆர் குறியீடு வாயிலாகப் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெறலாம் என்ற அறிவிப்புக்கு இணங்கப் பணம் கட்டியோரிடம் நிர்வாகக் கட்டணம் போன்ற காரணங்களுக்காக கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டது.

எல்லாவற்றையும் செலுத்திய பின்னர் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் போன பின்னரே தாங்கள் மோசடி செய்யப்பட்டதாகப் பொதுமக்கள் உணர்ந்தனர் என்று காவல்துறை விளக்கியது.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் தவிர்க்க ‘டிக்கெட்மாஸ்டர்’ (Ticketmaster) போன்ற அதிகாரபூர்வ இணையத்தளங்கள் வாயிலாக நுழைவுச்சீட்டுகளை வாங்குமாறு பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்