சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் (எஸ்ஜி60) கொண்டாட சிங்கப்பூர் ஆயுதப்படைப் பொழுதுபோக்குச் சங்கம் (சாஃப்ரா), தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் பல்வேறு அனுகூலங்களை வழங்குகிறது; ஓராண்டுக்கான இலவசக் காப்புறுதித் திட்டம் அவற்றில் அடங்கும்.
சிங்லைஃப் நிறுவனம் வரைந்துள்ள இந்தத் தனிநபர் விபத்து காப்புறுதித் திட்டம், சாஃப்ரா உறுப்பினர்கள், அவர்களின் துணைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு 50,000 வெள்ளி மதிப்பிலான காப்புறுதியை வழங்கும்.
தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் சாஃப்ரா தலைவருமான ஸாக்கி முகம்மது, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 16) நடந்த சாஃப்ரா குடும்ப தினக் கொண்டாட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்ச்சி, மண்டாயில் உள்ள ‘ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ பூங்காவில் நடந்தது.
1,500க்கும் மேற்பட்ட சாஃப்ரா உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவுக்கான நுழைவுச்சீட்டுகள் அவர்களுக்குக் குறைவான கட்டணத்துக்கு வழங்கப்பட்டன.
“தேசிய சேவையாளர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்பின் முக்கியத் தூணாக விளங்கி வருகின்றனர்,” என்றார் திரு ஸாக்கி.
“தேசிய சேவையாளர்களின் முயற்சிகளையும் அவர்கள் நாட்டுக்குச் சேவையாற்றும்போது நேரடியாக ஆதரவளித்ததற்காக அவர்களின் குடும்பத்தாரையும் அங்கீகரிக்கும் நோக்கில் வழங்கப்படும் அனுகூலங்களை மேம்படுத்த சாஃப்ரா எடுத்துவரும் முயற்சிகளில் இந்நடவடிக்கை அடங்கும்,” என்றும் திரு ஸாக்கி விவரித்தார்.
சாஃப்ரா குடும்பப் பராமரிப்பு (Safra Family Care) என்றழைக்கப்படும் இந்த 12 மாதக் காப்புறுதித் திட்டம், சாஃப்ரா, ‘புரொஃபெஷனல் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரி சர்விசஸ்’, ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். ‘புரொஃபெஷனல் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரி சர்விசஸ்’, சிங்லைஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
இத்திட்டத்தின்கீழ் சாஃப்ரா உறுப்பினர்கள், அவர்களின் துணைவியார், பிள்ளைகளில் யாரேனும் விபத்தின் காரணமாக உயிரிழந்தாலோ முழுமையாக அல்லது நிரந்தரமான உடற்குறை ஏற்பட்டாலோ ஒவ்வொருவரும் $50,000 பெறத் தகுதிபெறுவர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், விபத்துக்குப் பிறகு ஏற்படும் மருத்துவச் செலவைச் சமாளிக்க ஒவ்வொருவரும் 200 வெள்ளிவரை பெறக்கூடும். அதேபோல், லேசான எலும்பு முறிவு, அவசர மருத்துவ வாகனம் உள்ளிட்ட மருத்துவச் செலவுகளுக்கு 1,000 வெள்ளிவரை வழங்கப்படும்.
திட்டத்தில் பங்கேற்க விரும்பும் சாஃப்ரா உறுப்பினர்கள் 2026ஆம் ஆண்டிறுதிக்குள் https://www.safra.sg/our-services/safra-insurance/safra-family-care எனும் இணையப்பக்கம் வழியாகப் பதிவுசெய்யலாம்.