விலைவாசி உயர்ந்துவரும் சூழலில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் குழுமம் தனது சொந்த தயாரிப்புகளுக்கு அடுத்த 12 வாரங்களுக்குச் சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இம்மாதம் (மார்ச்) 19 முதல் ஜூன் 10 வரை நீடிக்கும் இந்தச் சலுகைக் காலத்தில், அரிசி, மெல்லிழைத் தாள்கள், பதப்படுத்தப்பட்டு உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவற்றுக்கு 36 விழுக்காடுவரை தள்ளுபடி வழங்கப்படும்.
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பொருள்களுக்குத் தள்ளுபடி தரப்படும். எடுத்துக்காட்டாக, முதல் வாரத்தில் கனோலா எண்ணெய், பன்றி இறைச்சி, மெல்லிழைத் தாள்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு விலைக்கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே, மற்ற நிறுவனப் பொருள்களைவிட தனது சொந்தத் தயாரிப்புகள் 10 முதல் 15 விழுக்காடுவரை குறைந்த விலையில் விற்கப்படுவதாக ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தள்ளுபடி, நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சிங்கப்பூரர்களின் செலவுகளைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவும் என்று அக்குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா கூறுகையில், “எங்கள் தயாரிப்புகள்மீது சிங்கப்பூரர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் செய்யும் நன்றிக்கடன் இது. இக்கட்டான காலங்களில் தரமான அத்தியாவசியப் பொருள்களை குறைந்த விலையில் வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
எஸ்ஜி60 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘குறைந்த விலையில் சிறந்த பொருள்கள்’ திட்டத்தைக் கடந்த ஆண்டு (2025) ஃபேர்பிரைஸ் தொடங்கியது.

