அறிவியல் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் $120 மில்லியன் திட்டம்

அறிவியல் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் $120 மில்லியன் திட்டம்

2 mins read
149736e8-ede3-4e08-bde8-1429786160df
திட்டம் மூலம் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்குத் தேவையானவற்றை விரைவாகக் கண்டறிந்து, அவற்றைப் பேரளவில் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்படும். - படம்: ராய்ட்டர்ஸ்

மலிவான விலையில் தூய்மையான ஹைட்ரஜன் எரிசக்தி மற்றும் அடுத்த தலைமுறை பகுதிமின்கடத்தி சில்லுகளை உருவாக்குவதற்கான புதிய ஆய்வகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் டொரோண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து இந்த அதிநவீன அறிவியல் ஆய்வகத்தை நிறுவியுள்ளன.

‘மெட்டீரியல்ஸ் டேட்டா ஃபௌன்டரி’ என்று அழைக்கப்படும் இந்த $10 மில்லியன் மதிப்பிலான ஆய்வகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக வேகமாகக் கூட்டாக ஆயிரக்கணக்கான சோதனைகளை நடத்தும். இதன் மூலம் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்குத் தேவையானவற்றை விரைவாகக் கண்டறிந்து, அவற்றைப் பேரளவில் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்படும்.

கடந்த 2024 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பூரின் தேசிய ‘அறிவியலுக்கான செயற்கை நுண்ணறிவு’ திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். தேசிய ஆய்வு அறநிறுவனம் வழங்கிய $120 மில்லியன் நிதியுதவியுடன் செயல்படும் இந்தத் திட்டம், அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பல மடங்கு வேகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் குறித்து பேசிய தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை நிரந்தரச் செயலாளர் பேராசிரியர் டான் சோர் சுவான், “கண்டுபிடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கவும் புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

மின்னணுத் துறை மட்டுமன்றி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி வடிவமைப்பைத் தானியக்கமாக்குவது, தென்கிழக்காசியப் பயிர் நிலங்களின் தன்மையைக் கணிப்பது மற்றும் முழு ரத்தப் பரிசோதனை மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிவது போன்ற மருத்துவ, விமானப் போக்குவரத்து மற்றும் கடல்துறைத் தொழில்நுட்பத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்த மாபெரும் கூட்டு ஆய்வில் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கேம்பிரிட்ஜ், இம்பீரியல் காலேஜ் லண்டன் உள்ளிட்ட முன்னணி உலகளாவியக் கல்வி அமைப்புகளும் பங்களிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்