இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 123ஆகப் பதிவானது.
அந்த விபத்துகளில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 1,260 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்ற ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். அந்தக் காலகட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் 128 சாலை விபத்துகள் நிகழ்ந்தன, 1,254 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பதை வலியுறுத்துவதற்கான புதிய வழிமுறைகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆராய்வதாக உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறினார். வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) கிளார்க் கீ ஃபவுன்டன் ஸ்குவேர் (Fountain Square) பகுதியில் நடைபெற்ற, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அதிகாரிகள் டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களைக் கொண்டும் அம்முயற்சியில் ஈடுபடுவதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார். மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரு சிறிய காணொளிகளை சிங்கப்பூர் காவல்துறை, டிக்டாக்கில் வெளியிட்டதை அவர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
அந்த இரு காணொளிகளும் பலராலும் பகிரப்பட்டன. அவை இரண்டு மில்லியனுக்கும் அதிக முறை காணப்பட்டன.
போக்குவரத்துக் காவல்துறை, அதன் பங்காளி அமைப்புகளான சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம், சிங்கப்பூர் இரவுநேர வர்த்தகச் சங்கம், சிங்கப்பூர் ரிவர் ஒன் (Singapore River One) ஆகியவற்றுடன் சேர்ந்து மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. சாலைப் பாதுகாப்பு பற்றி வாகனமோட்டிகளுக்கு நினைவூட்டுவது இயக்கத்தின் நோக்கமாகும்.