தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்ற ஆண்டு அசையாச் சொத்துகளில் $13.5 பில்லியன் முதலீடு

2 mins read
18,700 புதிய வேலைகள் உருவாக்கப்படும்
c8ba4162-2873-44ec-bc33-bb625ae239e8
இந்த ஆண்டு (2025) உலகளாவிய முதலீட்டுச் சூழல் சவால்மிக்கதாகவே தொடரும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், அசையாச் சொத்து முதலீடுகள் மூலம் சென்ற ஆண்டு (2024) அதற்கு முந்தைய ஆண்டைவிடக் கூடுதலாக 6.3 விழுக்காட்டுத் தொகையை ஈர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அசையாச் சொத்துகளில் $13.5 பில்லியன் முதலீடு செய்யப்பட்டது. 2023ல் அந்தத் தொகை $12.7 பில்லியனாகப் பதிவானது.

பொருளியல் வளர்ச்சிக் கழகம், வியாழக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்ட அதன் வருடாந்தர மறுஆய்வில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இட வசதிகள், கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றில் செய்யப்படும் முதலீடு அசையாச் சொத்து முதலீடு எனப்படும்.

இத்தகைய முதலீட்டில் 57 விழுக்காட்டுப் பங்களிப்புடன் மின்னணுத் துறை முன்னணி வகிக்கிறது.

உயிர்மருத்துவ உற்பத்தித் துறை 16.5 விழுக்காட்டுடன் இரண்டாம் நிலையிலும் தலைமையகம் மற்றும் தொழில்முறைச் சேவைகள் துறை 8.4 விழுக்காட்டுப் பங்களிப்புடன் மூன்றாம் நிலையிலும் உள்ளன.

வேதிப்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு இத்துறை அசையாச் சொத்து முதலீடுகளில் 35.6 விழுக்காடு பங்களித்திருந்தது. சென்ற ஆண்டு அது 2.7 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

உலகெங்கும் வேதிப்பொருள்களின் உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருப்பது இதற்குக் காரணம் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறியது.

துல்லியப் பொறியியல், செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட பொருள்கள், சேவைகள் ஆகியவை புதிதாக வளர்ச்சி கண்ட துறைகள். இவை குறித்த விரிவான தகவல்களைக் கழகம் வெளியிடவில்லை.

ஒட்டுமொத்தமாக, சென்ற ஆண்டு உறுதிசெய்யப்பட்ட திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் முழுமையாக நடப்புக்கு வரும்போது 18,700 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டைவிட 6.71 விழுக்காடு குறைவு.

புதிய வேலைவாய்ப்புகளில் 46 விழுக்காடு சேவைத் துறையிலும் 37 விழுக்காடு உற்பத்தித் துறையிலும் எஞ்சிய 17 விழுக்காட்டு வேலைகள் ஆய்வு, மேம்பாடு, புத்தாக்கத் துறைகளிலும் அமையும். இவற்றில் பெரும்பாலான வேலைகள், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கானவையாக (PMET) இருக்கும்.

இந்த வேலைகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, $5,000க்குமேலான மாதச் சம்பளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கழகம் கூறியது.

அமெரிக்காவின் வர்த்தக வரிகள் சிங்கப்பூரில் முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜேக்குலின் போ, தன்னைப்பேணித்தனக் கொள்கைகள் அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் பொருளியல் வர்த்தகத்தை அதிகம் சார்ந்தது என்பதைச் சுட்டிய அவர், வெவ்வேறு நாடுகள் வரி விதிப்பையும் தன்னைப்பேணித்தனக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தினால் அது உலகப் பொருளியல் வளர்ச்சியையும் வர்த்தகத்தையும் பாதிக்கும். அதன் எதிரொலியாகப் பொதுவான முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டும் முதலீட்டுச் சூழல் சவால்மிக்கதாகவே தொடரும் என்று கழகம் கூறியுள்ளது. இருப்பினும், 2030ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 10 விழுக்காடு விரிவடையக்கூடும். இதனால் சிங்கப்பூர் நன்மையடையும் என்று அது குறிப்பிட்டது. 

குறிப்புச் சொற்கள்