சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளையும் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளையும் புகைத்ததற்காக பாதுகாப்புச் சேவைகள் வழங்கும் செர்டிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பணியில் இருந்தபோது அதிகாரிகள் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனைச் சாவடிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை பறிமுதல் செய்து அப்புறப்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் தொட்டிகளை வைத்துள்ளது. அவற்றில் வீசப்பட்ட சிகரெட்டுகளை அதிகாரிகள் எடுத்து புகைத்த குற்றத்தையும் எதிர்கொள்கின்றனர்.
குற்றத்தை எதிர்கொள்ளும் அதிகாரிகளில் சிலர், $18,000க்கும் அதிகமான மதிப்புடைய மின்சிகரெட்டுகளையும் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளையும் புகைத்ததாக நம்பப்படுகிறது. பிற அதிகாரிகள் $1,438 மதிப்புடைய திருடப்பட்ட பொருள்களைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரிகளில் நால்வர் தங்கள் நடவடிக்கைகள் அடங்கிய பதிவுகளையும் ஆதாரங்களையும் அழித்ததாக ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) நீதிமன்றத்தில் குற்றத்தை எதிர்கொண்ட அதிகாரிகளில் 12 பேர் ஆடவர். அவர்கள் 32 வயதிலிருந்து 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
ஒலிவியா சான் வெய் யிங் என்ற 39 வயதுப் பெண் அதிகாரிமீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் புரியப்பட்ட சமயத்தில் அவர்கள் அனைவரும் செர்டிஸ் நிறுவனத்தில் அமலாக்க அதிகாரிகளாக வேலை செய்துகொண்டிருந்தனர்.
13 செர்டிஸ் அதிகாரிகளும் விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக மார்ச் 5ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்குத் திரும்புவர்.
தொடர்புடைய செய்திகள்
நம்பிக்கை மோசடி குற்றத்தை எதிர்கொள்வோருக்கு அதிகபட்சம் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.
திருட்டுப் பொருளை வைத்திருந்ததற்காகப் பிடிபடுவோருக்கு அதிகபட்சம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மின்சிகரெட்டுகள் வைத்திருந்த குற்றத்திற்கு $2,000 அபராதம் விதிக்கப்படக்கூடும்.

