பணம் ஈட்டும் நோக்கில் ‘போஸ்ட்பெய்ட்’ சிம் அட்டைகளை முறைகேடாகப் பதிவுசெய்த குற்றச்சாட்டின் பேரில் 11 ஆண்கள், இரு பெண்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தது.
19 முதல் 31 வயதுக்குட்பட்ட அந்த 13 பேரும் ஜூலை 20ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். கைது செய்யப்பட்டவர்கள், தங்களது பெயர்களில் பல சிம் அட்டைகளைப் பதிவுசெய்து குற்றக் கும்பல் ஒன்றிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு சிம் அட்டைக்கும் தலா $10 முதல் $30 வரை அவர்களுக்குப் பணச் சலுகை வழங்கப்பட்டது. வெவ்வேறு கடைகளிலிருந்து பேரளவில் சிம் அட்டைகளை வாங்குமாறும் பின்னர் அவற்றை விரைவு அஞ்சல் ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் கும்பல் அவர்களுக்கு அறிவுறுத்தியது.
மோசடிகள், சட்டவிரோதக் கடன் கொடுத்தல், பாலியல் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கான தகவல் தொடர்புச் சாதனமாக இத்தகைய உள்ளூர் சிம் அட்டைகளைக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்தி வருவதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் எதிர்காலத்தில் புதிய கைப்பேசி எண்களைப் பெற அனுமதி மறுக்கப்படலாம். குற்றச்செயல் புரியும் நோக்குடன் முறைகேடாகப் பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டையை மற்றொருவருக்கு வழங்குவது சட்டப்படி குற்றமாகும்.
இக்குற்றத்துக்காக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுபவர்களுக்கு $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் பணமோசடியில் ஈடுபடுவோர், சிங்பாஸ் விவரங்களை வழங்குபவர்களுக்கும் பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

