தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்; 13 வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிப்பு

2 mins read
deb4ee69-1fe5-453e-8454-6beaca2e652a
2024ஆம் ஆண்டில் மொத்தம் 43 வேலையிட மரணங்கள் பதிவாகின. நால்வர் உயரமான இடங்களிலிருந்து விழுந்து மடிந்தனர். - படம்: சாவ்பாவ்

உயரமான இடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பாதுகாக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 13 வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அத்துடன் $375,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது.

பிப்ரவரி மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கிட்டத்தட்ட 550 வேலையிடங்களில் சோதனை நடத்தப்பட்டபோது விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.

2024ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளை அடுத்து விதிக்கப்பட்ட அபராதத்தைவிட இவ்வாண்டு விதிக்கப்பட்ட அபராதம் குறைவு.

இருப்பினும், வேலை நிறுத்த உத்தரவு ஒன்பதிலிருந்து 13ஆக அதிகரித்துள்ளது.

ஆக அண்மைய சோதனைகளின்போது 1,300 பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்புடைய பங்குதாரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியது.

2024ஆம் ஆண்டில் மொத்தம் 43 வேலையிட மரணங்கள் பதிவாகின.

நால்வர் உயரமான இடங்களிலிருந்து விழுந்து மடிந்தனர்.

இந்த எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் ஆகக் குறைவு என்று மார்ச் மாதத்தில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் தெரிவித்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் வேலையிட மரணங்களுக்கான முக்கிய காரணங்கள் பட்டியலில் உயரமான இடத்திலிருந்து விழுவது தொடர்ச்சியாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு அது ஐந்தாவது இடத்துக்குச் சரிந்தது.

மற்ற விபத்துகள் காரணமாக ஏற்படும் காயங்களைவிட உயரமான இடங்களிலிருந்து விழும்போது ஏற்படும் காயங்கள் மிகவும் கடுமையானவை என்றும் அதன் விளைவாக ஏற்படும் பாதிப்பு பொதுவாக மோசமானதாக இருக்கும் என்றும் மன்றம் கூறியது.

2024ஆம் ஆண்டில் உயரமான இடங்களிலிருந்து விழுந்து 74 ஊழியர்கள் கடுமையான காயமடைந்தனர்.

அவ்வாண்டு வேலையிடங்களில் காயமடைந்தோரில் இது கிட்டத்தட்ட 13 விழுக்காடு.

வேலையிடங்களை பாதுகாப்பானதாக வைத்திருக்கவும் ஊழியர்களும் வர்த்தகங்களும் நலமுடன் இருப்பதை உறுதி செய்யவும் அமலாக்கப் பணிகள் தொடரும் என்று மனிதவள அமைச்சு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

குறிப்புச் சொற்கள்