புதிய செம்பவாங் நார்த் வீடமைப்புப் பேட்டையில் தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) 1,310 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் வரும் நவம்பர் மாத விற்பனையில் அறிமுகம் காணவுள்ளன.
இது இவ்வாண்டின் இறுதி விற்பனை நடவடிக்கை எனக் கழகம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) தெரிவித்தது. அந்த வீடுகளுக்கான காத்திருப்புக்காலம் ஈராண்டுகளும் 10 மாதங்களும் ஆகும்.
அத்துடன், பேஷோர், தெங்கா பகுதிகளில் மொத்தம் 2,875 வீடுகளைக் கொண்ட மேலும் இரு திட்டங்கள் நவம்பர் மாத விற்பனையில் இடம்பெறும். அவற்றிற்கான காத்திருப்புக்காலம் மூன்று ஆண்டுகள், இரண்டு மாதங்கள்.
இதன்மூலம் இவ்வாண்டில் மூவாண்டுகளுக்கும் குறைவான குறுகியகாலக் காத்திருப்பைக் கொண்ட 4,661 வீடுகள் விற்பனைக்கு விடப்படுகின்றன.
இவ்வாண்டில் 4,000க்கும் அதிகமான வீடுகளை விற்பனைக்குவிட வீவக கடப்பாடு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கி 2027ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குறுகியகாலக் காத்திருப்பைக் கொண்ட 12,000 வீடுகளை விற்பனைக்குவிடும் திட்டமும் சரியான திசையில் செல்வதாகக் கழகம் கூறியது.
விற்பனைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் உயர்த்தப்பட்ட வருமான உச்சவரம்பு இந்த விற்பனையில் நடப்புக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குடும்பங்களுக்கு $16,000 ஆகவும் ஒற்றையர்க்கு $8,000 ஆகவும் அது உயர்த்தப்பட்டுள்ளது.
அட்மிரல்டி லேன், செம்பவாங் டிரைவ் பகுதிகளில் அமையவுள்ள செம்பவாங் ஆங்கர் திட்டத்தில் ஈரறை நீக்குப்போக்கு வீடுகள் முதல் ஐந்தறை வீடுகள் வரை இடம்பெறும்.
ஆறு புளோக்குகளில் ஒன்றில் வாடகை வீடுகள் அமையும். பேஷோர் வட்டாரத்தில் பேஷோர் ஒயேசிஸ் திட்டத்தின்கீழ் 855 வீடுகளும் அதற்கு அருகில் 1,640 வீடுகளைக் கொண்ட மற்றொரு திட்டமும் அறிமுகமாகும் எனக் கழகம் குறிப்பிட்டது.
தெங்காவில் அமையும் பிளான்டேஷன் டியூ திட்டத்தின்மூலம் 710 வீடுகள் கட்டப்படும்.
அது வரவிருக்கும் ஜூரோங் வட்டார ரயில் பாதையில் அமையவுள்ள இரு ரயில் நிலையங்களிலிருந்து ஐந்து முதல் 10 நிமிட நடைத்தொலைவில் அமைந்திருக்கும்.
அங்கு வரவேற்பறைக்கும் படுக்கையறைக்கும் இடையில் உட்புறத் தடுப்புச் சுவர்கள் இல்லாத திறந்தவெளிப் பாணி வீடுகள் அமையும். ஐந்தறை வீடுகளில் அவ்வகைக் கட்டமைப்பு இடம்பெறுவது இதுவே முதன்முறை.
பிடோக், கேலாங், தோ பாயோ, ஈசூன் வட்டாரங்களில் அமையும் நான்கு வீடமைப்புத் திட்டங்களும் அடுத்துவரும் விற்பனை நடவடிக்கையில் இடம்பெறும்.
