கூ டெக் புவாட் அறக்கட்டளையிடமிருந்து சிங்ஹெல்த்துக்கு $135 மில்லியன் நன்கொடை

2 mins read
சுகாதாரப் பராமரிப்பின் வளர்ச்சிக்கு உதவும்
66df7507-a0dd-4942-a323-9cf8cc778a18
ஊட்ரம் சமூக மருத்துவமனையில் கூ டெக் புவாட் அறக்கட்டளைக்கு நன்றியின் அடையாளமாக நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் (இடமிருந்து 3வது), சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் (வலமிருந்து 3வது) கலந்துகொண்டனர். இவர்களுடன் (இடமிருந்து) சிங்ஹெல்த் குழுமத் தலைமை நிர்வாகி இங் வாய் ஹோ, கூ டெக் புவாட் அறக்கட்டளையின் அறங்காவலர் மேவிஸ் கூ, சிங்ஹெல்த் தலைவர் செங் வாய் கியுங், சிங்ஹெல்த் நிதி வாரியத் தலைவர் ஐவி இங் ஆகியோர் உள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகப்பெரிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான சிங்ஹெல்த், அதன் வளர்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மாற்றங்களை மேம்படுத்துவதற்காக, காலஞ்சென்ற பெருஞ்செல்வந்தரான கூ டெக் புவாட்டின் அறக்கட்டளையிடமிருந்து $135 மில்லியன் நிதியுதவியைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள ஆகப்பெரிய ஒரே பங்களிப்பான இந்தத் தொகை, சிங்ஹெல்த் குழுமத்தின் நான்கு முக்கிய அம்சங்களுக்கு ஆதரவளிக்கும்.

முதலாவதாக, தனிப்பயனாக்கப்பட்ட, முன்கூட்டியே செயல்படும் சுகாதாரத் தலையீடுகளைச் சாத்தியமாக்க சமூகத்தில் புத்தாக்கப் பராமரிப்பு முறைகளை விரிவுபடுத்துவது.

இரண்டாவதாக, புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பது. நோயைக் கண்டறிவதில் துல்லியத்தை மேம்படுத்தவும் நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளைச் சிறந்ததாக்கவும் மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்துவது.

மூன்றாவதாக, சிக்கலான, அவசரமான சுகாதாரச் சவால்களைக் கையாள அதிநவீன மருத்துவ ஆய்வை முன்னெடுப்பது.

சுகாதாரப் பராமரிப்புத் திறனாளர்களை ஈர்த்து அவர்களைத் தக்கவைப்பதிலும் தலைமைத்துவ மேம்பாட்டிலும் முதலீடு செய்வதன் மூலம் வருங்காலத்துக்குத் திறமையாளர்களைப் பேணுவது.

இந்த நன்கொடை மனநலம், தாய்-சேய் நலம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய அறிவியல் மற்றும் புற்றுநோயியல் உள்ளிட்ட பல மருத்துவப் பிரிவுகளில் ஆய்வுகளைத் தூண்டும்.

மருத்துவ ஆய்வு, புத்தாக்கம், கல்வி ஆகியவை மக்களின் வாழ்வை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவை என்ற ஆழ்ந்த நம்பிக்கையை இந்த நன்கொடை வெளிப்படுத்துவதாக கூ டெக் புவாட் அறக்கட்டளையின் அறங்காவலர் மேவிஸ் கூ கருத்துரைத்தார்.

ஊட்ரம் சமூக மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “மறைந்த என் தந்தைக்கு இன்று 109வது பிறந்தநாளாக இருந்திருக்கும்.

“அவருக்கு நெருக்கமான சுகாதாரப் பராமரிப்புத் துறையில் முன்னேற்றங்களை ஆதரிப்பதன் மூலமும் வருங்கால சிங்கப்பூர் தலைமுறையினருக்குச் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலமும் அவரது மரபைப் போற்றுவதற்கான ஒரு வழியாகவே இந்த நன்கொடையை நாங்கள் கருதுகிறோம்,” என்றார்.

இந்த நன்கொடை மூலம் உலகத் தரம்வாய்ந்த கல்விசார் மருத்துவ மையமாகவும் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமாகவும் சிங்ஹெல்த் தனது நிலையை உயர்த்திக்கொள்ளும் என்றும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் அது ஆர்வமாக உள்ளது என்றும் சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் வாய் ஹோ கூறினார்.

ஊட்ரம் சமூக மருத்துவமனை அமைந்துள்ள கட்டடத்திற்கு ‘கூ டெக் புவாட் மக்கள் சுகாதார மையம்’ என்று பெயரிடும் விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஊட்ரம் சமூக மருத்துவமனையில் கூ டெக் புவாட்டின் மார்பளவு உருவச்சிலையை அதிபர் தர்மன் சண்முகரத்னம் திறந்து வைக்கிறார்.
ஊட்ரம் சமூக மருத்துவமனையில் கூ டெக் புவாட்டின் மார்பளவு உருவச்சிலையை அதிபர் தர்மன் சண்முகரத்னம் திறந்து வைக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால முயற்சிகளின் மையமாக இது விளங்கும். இவ்விழாவில் மறைந்த கூ டெக் புவாட்டின் மார்பளவு உருவச்சிலையை அதிபர் திறந்து வைத்தார்.

குறிப்புச் சொற்கள்