சட்டவிரோத வாகன சேவை வழங்கியதற்காக சாங்கி விமான நிலையத்தில் ஆகஸ்ட் 27 முதல் 30ஆம் தேதி வரை நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய சோதனையில் 14 ஓட்டுநர்கள் பிடிபட்டனர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையேயும் சிங்கப்பூரிலும் அந்த ஓட்டுநர்கள் சட்டவிரோத வாகன சேவை வழங்கியதாக ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது. வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, சட்டவிரோத வாகன சேவையை ஒடுக்குவதில் ஆணையத்துடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாக தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. விமான நிலையத்தில் சட்டவிரோத ஓட்டுநர்கள் வழங்கிய சேவையை எதிர்கொள்வதில் ஆக்ககரமான செயல்பாடுகளை தான் கண்டு வருவதாக அது கூறியது.
இத்தகைய சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு வலியுறுத்திய ஆணையம், இவ்வாறு செய்வதால் சட்டத்தை மீறுவது மட்டுமின்றி ஒருவரின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுவதாக எடுத்துரைத்தது. சம்பந்தப்பட்ட வாகனங்களிடம் போதிய காப்புறுதி இல்லாமல் இருக்கலாம் என ஆணையம் விவரித்தது.

