தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூனைகளைக் கொன்ற ஆடவருக்கு 14 மாதச் சிறை

2 mins read
f6500298-b92e-4e62-8e26-e7cc06fa698e
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பூனைகளை பேரி அச்சுறுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது கோபத்தை தணித்துக்கொள்ள பூனைகளைத் துன்புறுத்திய ஆடவர், ஒரு கட்டத்தில் இரண்டு பூனைகளைக் கொடூரமாக கொன்றார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் உயர் மாடியில் இருந்து இரண்டு பூனைகளைக் கீழே வீசிக் கொன்றார் 32 வயது பேரி லின் பெங்லி.

பேரியின் குற்றச்செயல்களுக்காக அவருக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பேரி 2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்து பூனைகளைத் துன்புறுத்தத் தொடங்கினார். முதலில் பூனைகளை உதைத்து அடித்த பேரி, அதன் பின்னர் பூனைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து மூச்சுத் திணறல் போன்ற வதைகளைச் செய்தார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பூனைகளை பேரி அச்சுறுத்தினார். பூனைகளை அச்சுறுத்துவதன் மூலம் பேரிக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.

பேரி மொத்தம் ஐந்து பூனைகளைத் துன்புறுத்தினார். அதில் இரண்டு கொல்லப்பட்டது. ஒன்றுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

மற்ற இரண்டு பூனைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து மூச்சுத் திணறல் வதையை செய்தார் பேரி.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேரி அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 572ல் உள்ள 12வது மாடியில் இருந்து ஒரு பூனையை கீழே வீசினார். அதில் பூனை சம்பவ இடத்திலேயே மாண்டது.

பின்னர் அதே ஆண்டு மே மாதம் பேரி மற்றொரு பூனையை அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள புளோக் 645ல் உள்ள 8வது மாடியில் இருந்து கீழே வீசினார்.

ஆனால் பூனை பிழைத்துக்கொண்டது. இதனால் கோபமடைந்த பேரி பூனையின் கழுத்தை மிதித்தார். அதில் பூனை மாண்டது.

இதைக் கண்ட நபர் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதே நாளில் பேரி கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்தார்.

பேரியின் இந்தச் செயல்கள் கொடூரமானது என்று கூறிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிக்கு 24 மாதங்கள் சிறைத் தண்டனை கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி பேரிக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதித்தார்.

குறிப்புச் சொற்கள்