தீவு விரைவுச்சாலையில் 14 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இரவு, சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், ஜாலான் யூனோசில் வெளியேறும் பகுதிக்குப் பிறகு நிகழ்ந்தது.
இதில் எட்டு பேர் காயமடைந்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து குறித்து இரவு 9.50 மணி அளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பதினொரு கார்கள், இரண்டு டாக்சிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளானதாகக் காவல்துறை கூறியது.
காயமடைந்தோரில் ஏழு பேர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சாலையின் வலது தடத்தில் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வாகனங்கள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டன.
ஆகக் கடைசியில் இருந்த கார் மிக மோசமாக சேதமடைந்தது.
விபத்தில் சிக்கிய சிவப்பு நிறக் கார் சாலைத் தடுப்பின்மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனங்களைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

