தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூவாண்டுக்கும் குறைவான காத்திருப்புக் காலம் கொண்ட 1,400 பிடிஓ வீடுகள் இம்மாதம் விற்பனை

2 mins read
85064981-bcd0-4a1d-9516-219e27f16105
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இம்மாதம் 4,600 எஞ்சிய வீடுகளின் விற்பனையைத் தொடங்க உள்ளது. அவற்றில் 1,733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, குடிபுகும் நிலையில் உள்ளவை. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இம்மாதம் 4,600 எஞ்சிய வீடுகளின் விற்பனையைத் தொடங்க உள்ளது. அவற்றில் 1,733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, குடிபுகும் நிலையில் உள்ளவை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார்.

இருப்பினும், விற்பனை தொடங்கும் நாள் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜூலை மாதம் 3,000 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மட்டுமே இதற்கு முன்னர் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக புதன்கிழமை (ஜூலை 16) வெளியிடப்பட்ட அந்தப் பதிவில் திரு சீ குறிப்பிட்டு உள்ளார்.

இது இவ்வாண்டின் இரண்டாவது எஞ்சிய வீட்டு விற்பனை.

பிப்ரவரி மாதம் 5,590 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மிதமிஞ்சிய வரவேற்பு இருந்தது. அந்த வீடுகளுக்காக 22,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் செய்யப்பட்டு இருந்தன.

இவை தவிர, இம்மாதம் 5,500 புதிய பிடிஓ வீடுகளும் விற்பனைக்கு விடப்படும் என்றும் அமைச்சர் சீ தெரிவித்து உள்ளார்.

அந்த வீடுகள் புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், கிளமெண்டி, தெம்பனிஸ், தோ பாயோ, செம்பவாங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும்.

புதிய 5,500 வீடுகளில் 1,400 வீடுகள் மூன்றாண்டுக்கும் குறைவான காத்திருப்புக் காலத்தைக் கொண்டிருக்கும் என்றும் அவை கிளமெண்டி எமரால்ட், புக்கிட் பாஞ்சாங்கின் பங்கிட் பிரீஸ் பிடிஓ திட்டங்களில் இடம்பெற்று இருக்கும் என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

கிளமெண்டி எமரால்ட் திட்டத்தில் கட்டப்படும் 753 வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் 34 மாதமாக இருக்கும்.

அதேபோல பங்கிட் பிரீஸ் திட்டத்தில் இடம்பெறம் 643 வீடுகள் 35 மாத காத்திருப்புக் காலத்தைக் கொண்டிருக்கும் என்றார் அமைச்சர்.

செம்பவாங் வெஸ்ட் வட்டாரத்தின் முதல் பிடிஓ வீடுகளும் இம்மாத விற்பனையில் இடம்பெறும்.

ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நாலறை மற்றும் ஐந்தறை வீடுகளுடன் மூன்றாம் தலைமுறை வீடுகளும் அடங்கிய செம்பவாங் பீக்கன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அந்தத் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் மூவாண்டுகள்.

ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு சீமெய் வட்டாரத்திலும் புதிய பிடிஓ வீடுகள் கட்டப்பட உள்ளன. அது தெம்பனிஸின் ஒரு பகுதி என்று வீவக வகைப்படுத்தி உள்ளது.

சீமெய் ரோட்டுக்கும் அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில் 380 ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளும் நாலறை மற்றும் ஐந்தறை வீடுகளும் கட்டப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்