அண்மையில் ஃபுல்லர்டன் ஹெல்த் இணையத்தளம் ஊடுருவப்பட்டது. அதில் ஏறக்குறைய 140,000 வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்போரின் தகவல்கள் கசிந்தன.
எனினும், அவர்களின் மருத்துவ, தனிப்பட்ட நிதித் தகவல் ஏதும் பாதிக்கப்படவில்லை.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆரம்பக்கட்டப் பராமரிப்புத் திட்டத்தின் இணையக் கட்டமைப்பில் அந்த ஊடுருவல் நடந்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் முழுப் பெயர், வெளிநாட்டு அடையாள எண், பிறந்த தேதி, கைப்பேசி எண், மின்னஞ்சல் விவரம், வீட்டு முகவரி ஆகியவை கசிந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 43,000 பேரின் வேலை அனுமதிச்சீட்டுகள் காலாவதியானவை என ஃபுல்லர்டன் ஹெல்த் குழுமமும் மனிதவள அமைச்சும் நவம்பர் 14ஆம் தேதி தெரிவித்தன.
ஆரம்பக்கட்ட பராமரிப்புத் திட்டத்தை நிர்வகிக்க மனிதவள அமைச்சு நியமித்துள்ள நான்கு முக்கிய நிறுவனங்களில் ஃபுல்லர்டன் ஹெல்த் குழுமமும் ஒன்று.
அக்டோபர் 31ஆம் தேதி இணையத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உணர்ந்த நிறுவனம், நவம்பர் 2ஆம் தேதி அமைச்சிடம் தகவல் அளித்தது. பின்னர், நவம்பர் 9ஆம் தேதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இணையக் கட்டமைப்பை உடனடியாகத் தனிமைப்படுத்தியதாக ஃபுல்லர்டன் ஹெல்த் குழுமமும் கூறியது. அத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய முற்றிலும் புதிய கட்டமைப்பு ஒன்றும் புதிதாக உருவாக்கப்படுகிறது.
பழைய கட்டமைப்பு பயன்படுத்தப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஊடுருவல் சம்பவத்தால் ஊழியர்களின் மருத்துவச் சேவைகளுக்கு எந்தத் தடையுமில்லை என்பதை நிறுவனமும் அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களை எச்சரிக்க முதலாளிகள் வழியாக இரண்டு சுற்று அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மனிதவள அமைச்சின் பிரத்தியேக கைப்பேசிச் செயலி வழியாக ஊழியர்களின் தாய்மொழிகளிலேயே நேரடியாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
தேவையற்ற அழைப்புகள், குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்க ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.
இணையத் தாக்குதல் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் மற்றத் தகவல் தொழில்நுட்பச் சொத்துகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
மற்ற நிறுவனங்களும் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சு நினைவூட்டுகிறது.
