மின்னிலக்க நாணய (கிரிப்டோ கரன்சி) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக நடந்த இணைய நேர்காணலில், விண்ணப்பதாரரின் கணினி ஊடுருவப்பட்டு, அதன் விளைவால் அவரது நிறுவனத்தில் இருந்து மின்னிலக்க நாணயங்கள் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டன.
இதேபோன்று நடந்த மோசடிச் சம்பவங்களால் $15.11 மில்லியன் (US$11.8 மில்லியன்) இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) கூட்டாகத் தெரிவித்துள்ளன.
மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்களில் வேலை தேடுவோரை மின்னஞ்சலில் தொடர்புகொள்கின்றனர். பிறகு ஆட்சேர்ப்பு நடத்தும் அசல் நிறுவனங்களைப்போல அவர்களது இணையப் பக்கங்களை வடிவமைத்து, விண்ணப்பங்களைப் பெருகின்றனர்.
‘கூகல்மீட்’ முறையில் இணைய நேர்காணல்கள் உண்மையாக நடப்பதுபோல் இருந்தாலும் விண்ணப்பதாரரின் சொந்த நிறுவனத்தின் விவரங்கள் நேர்காணலில் பெறப்படுகின்றன. நேர்காணலில் நிறுவனத்தை பிரதிநிதிப்பவர் போல நடிக்கும் மோசடிக்காரர் முகத்தைக் காட்டிக்கொள்வதில்லை.
நேர்காணில் ஓர் அங்கமாக விண்ணப்பதாரர் அறியாமலேயே மோசடிக்காரர்கள் வழங்கும் தீங்குநிரலை அவரது கணினியில் பதிவிறக்கம் செய்யவைக்கப்படுகிறார்.
விண்ணப்பதாரர் பணிபுரியும் தற்போதைய நிறுவனத்தின் கணினி கட்டமைப்புகளின் தொழில்நுட்ப விவரங்களை மோசடிக்காரர்கள் பெற்றுக்கொண்டு அவற்றை பல மாற்று வழிவகைகளில் அதன் மறைச்சொல், குறிப்புகள் போன்றவற்றை ஊடுருவுகின்றனர்.
பிறகு அந்த நிறுவனத்தின் கணினித் தற்காப்பு அரண்களைக் கடந்து மின்னிலக்க நாணயங்களை எளிதில் அடையாளம் காணமுடியாத கணக்குகளுக்கு மாற்றி மோசடிப் பரிவர்த்தனைகள் செய்கின்றனர்.


